எம்.பி. பதவி நீக்கம்: அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய மஹுவா மொய்த்ரா
எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார். இதுதொடர்பாக, மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. அதில், மஹுவா மொய்த்ராவைப் பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை மக்களவையில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக குரல் வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எம்.பி. பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டாா். அவையில் மஹுவா மொய்த்ரா பேசுவதற்குக்கூட வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா, “முழுமையான விசாரணை நடத்தப்படாமல் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதானி என்ற ஒருவருக்காக ஒட்டுமொத்த அரசும், இயங்கி வருகிறது. அதானி மீது மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதானியைக் காப்பாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. பெண்கள், சிறுபான்மையினர் அனைவரின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வரும் பாஜக அரசின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது” என கடும் ஆவேசத்துடன் தெரிவித்திருந்தார்.
மஹுவாவின் பதவி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “இது பாஜகவின் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை. அவர்கள் ஜனநாயகத்தை கொன்றுள்ளனர். இது அநீதி. போரில் மஹுவா வெற்றிபெறுவார். பாஜகவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். மஹுவா மொய்த்ரா வெளியேற்றப்பட்ட விதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். கட்சி அவருடன் துணை நிற்கிறது. மொய்த்ரா ஒரு பெரிய பலத்துடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்புவார்” எனச் சொல்லி ஆதரவுக்கரம் நீட்டினார்.
இந்த நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து, தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.