உயிருக்கு ஆபத்தாகும் முறையற்ற டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள்..
Life-threatening improper prescription drugs without a prescription.
டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் தானாகவே கடைகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால், ஏதாவது பக்க விளைவுகள், பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கு பொதுமக்கள் தான் முழு பொறுப்பு. ஏனென்றால், என்ன மருந்து, மாத்திரைகள் உட்கொண்டோம் என்பதற்கு ஆதாரமாக டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இருக்காது. அதனால், யாரையும் குறை சொல்ல முடியாது.
தலை வலி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கான மருந்து, மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடியாக விளம்பரம் செய்கின்றன. அதை பார்க்கும் மக்கள், அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்போது அந்த மருந்து, மாத்திரைகளை வாங்குகின்றனர். குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் என்று பாதிக்கப்பட்டால் உடனடியாக தாய்மார்கள் பாராசிட்டமால் மருந்து, மாத்திரைகளை அதிகமாக கொடுக்கின்றனர். மேலும், சொட்டு மருந்திற்கும், டானிக்கிற்கும் (சிரப்) வித்தியாசம் தெரிவதில்லை. சொட்டு மருந்தை 3 சொட்டு கொடுக்க வேண்டும், டானிக் ஒரு ஸ்பூன் தர வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், டானிக் அளவிற்கு, சொட்டு மருந்தை கொடுத்து விடுகின்றனர். டாக்டரின் ஆலோசனை இல்லாமல், டானிக், பாரசிட்டமாலை அதிகமாக கொடுப்பதால் குழந்தைகளின் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும்.
நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகள் ஜீரண மண்டலத்திற்கு சென்று சிறுகுடல், பெருகுடல் வழியாக நோய்களுக்கு தீர்வு காண்கிறது. அதன்பின், கடைசியாக கல்லீரல் வந்தடைகிறது. அதையடுத்து மருந்து, மாத்திரைகள் கரைந்து சிறுநீராக வெளியேறுகிறது. கல்லீரல், சிறுநீரகம் செயல்பாட்டை அறிந்து, உடல் எடையை கணக்கிட்டு, டாக்டர்கள் மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுப்பார்கள். டாக்டர்கள் பரிந்துரைத்ததை விட கொஞ்சம் கூடுதலாக சாப்பிட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் நேரடியாக வாங்குகின்றனர். அந்த மருந்தின் பக்க விளைவுகள் தெரிவதில்லை. எவ்வளவு டோஸ் உட்கொள்ள வேண்டும் என்றும் தெரிவதில்லை.
இதனால், முதலில் கல்லீரல் செயலிழக்கும், அதன்பின் சிறுநீரகம் என படிப்படியாக ஒவ்வொரு உறுப்பாக பாதிக்கப்பட்டு, கடைசியாக உயிருக்கே ஆபத்தாக அமையும். படித்தவர்கள் மற்றும் மருந்து, மாத்திரைகளை பற்றி அறைகுறையாக தெரிந்தவர்கள்தான், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் தானாகவே மருந்து, மாத்திரைகளை வாங்குகின்றனர். தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் கூறுகையில், "மருந்து கடைக்காரர்கள் வலிகளை நீக்கும் மாத்திரை, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, மயக்க மருந்து, தூக்க மாத்திரை போன்ற பட்டியலில் உள்ள மருந்துகளை டாக்டர்கள் சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு கொடுக்க அனுமதியில்லை. சாதாரண காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் போன்ற மருந்து, மாத்திரைகளை விற்கலாம். அதுவும் அளவுக்கு அதிகமாக கொடுக்க அனுமதி இல்லை" என்றார்..