வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக 200 பேரிடம் ரூ.5 கோடி மோசடி - சென்னையில் 6 பேர் கைது

வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக 200 பேரிடம் ரூ.5 கோடி மோசடி - சென்னையில் 6 பேர் கைது
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகக் கூறி, 200 பேரிடம் ரூ.5 கோடி மோசடி செய்து கைதான 6 பேர் கும்பல்.

சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகக் கூறி, 200 பேரிடம் ரூ.5 கோடி மோசடி செய்ததாக கணவன், மனைவி உள்பட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், ‘அயனாவரத்தைச் சேர்ந்த பரணிதரன் (46), சேத்துப்பட்டைச் சேர்ந்த ரோகினி பிரியா (49) உள்பட மேலும் சிலர், எங்களுக்கு குடிசைமாற்று வாரியத்தில் உள்ள உயர் அதிகாரிகளைத் தெரியும். அவர்கள் மூலம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.

சில தினங்களில் வீடு ஒதுக்கீடு ஆணையை என்னிடம் கொடுத்தனர். இதை உண்மை என நம்பி அவர்கள் கேட்டபடி ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தேன். அதன் பிறகுதான் அது போலி வீடு ஒதுக்கீடு ஆணை என தெரியவந்தது. இதையடுத்து, கொடுத்த பணத்தை திரும்பி கேட்டபோது அவர்கள் தர மறுத்து மிரட்ட ஆரம்பித்தனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்’ என கூறியிருந்தார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா மேற்பார்வையில், உதவி ஆணையர் காயத்ரி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், முத்துலட்சுமியிடம் பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. மேலும், இதேபோல் 200 பேரிடம் ரூ.5 கோடி வரை பண மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பரணிதரன், ரோகினி பிரியா மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஜி.கே.எம் காலனி அப்துல் நாசர் (40), அயனாவரம் ரேவதி (40) மற்றும் அம்பத்தூர் கஜேந்திரன் (38), அவரது மனைவி சாமுண்டீஸ்வரி (39) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.