காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படும் என எச்சரிக்கை

காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படும் என எச்சரிக்கை
காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படும் என எச்சரிக்கை

சேலம்: காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 117. 56 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6,223 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலையில் நீர்வரத்து 7,382 கன அடியாக அதிகரித்தது.

இதனிடையே, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, கர்நாடகாவின் கபினி அணை முழு கொள்ளளவில் உள்ளதால் அந்த அணையிலிருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேற்றப்படும் நிலை உள்ளது.

இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே, அணையில் இருந்து, காவிரியில் எந்நேரத்திலும் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி முதல் 75 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்படும் . இதனால் காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.