கேப்டன் பிரபாகரன் ரீரிலீஸ்: டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

கேப்டன் பிரபாகரன் ரீரிலீஸ்: டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும்

தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

நவீன 4K தொழில்நுட்பத்தில் இப்படம் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், ஒரு மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறது கோலிவுட்.

மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தின் மைல்கல் திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' மீண்டும் திரைக்கு புதுப்பொலிவுடன் வருகிறது. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

மேலும், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் ஒரு புத்தம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் வகையில், நவீன 4K தொழில்நுட்பத்தில் இப்படம் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு அன்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு மக்கள் மத்தியில் 'கேப்டன்' என்ற அடையாளப் பெயரைப் பெற்றுத் தந்தது, அதுவே அவரது வாழ்நாள் முழுவதும் நிலைத்தது.

இசைஞானி இளையராஜாவின் அதிரடியான இசையில், விஜயகாந்துடன் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், லிவிங்ஸ்டன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.