தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் குடி நீர் திட்டம்: எதிர்த்துப் போராடும் விவசாயிகள் - காரணம் என்ன?

தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் குடி நீர் திட்டம்: எதிர்த்துப் போராடும் விவசாயிகள் - காரணம் என்ன?
தஞ்சாவூர்: புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிராக போராடும் கிராம மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருச்செனம்பூண்டி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் புதிய கூட்டுக் குடி நீர் திட்டத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, , கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கிராமப் பகுதிகளின் குடிநீர் தேவைக்காகத்தான் இந்த திட்டம். நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க தடுப்பணைகள் அமைக்கப்படும். பாதிப்பில்லாமல் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தொகுதி எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் திருச்செனம்பூண்டி பகுதி கொள்ளிடம் ஆற்றில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குடி நீர் வழங்கும் கூட்டுக் குடி நீர் திட்டத்திற்கான நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, ராட்சத ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் தினமும் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அதே பகுதியில் மேலும் ஒரு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான சோதனைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொண்டனர். இதற்கு திருச்செனம்பூண்டி, கோவிலடி உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 10ம் தேதி அப்பகுதி மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, கடந்த 13ம் தேதி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, எதிர்ப்பை பதிவு செய்தனர். குடி நீர்த் திட்டத்திற்கு ஏன் இந்த எதிர்ப்பு? கிராம மக்களின் போராட்டம் எதற்காக என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டோம்.

கிராம மக்களின் எதிர்ப்பு ஏன்?

இது குறித்து திருச்செனம்பூண்டியைச் சேர்ந்த தென்னரசு கூறுகையில், ''எங்கள் ஊருக்கு தெற்கில் காவிரியும் வடக்கில் கொள்ளிடம் ஆறும் உள்ளன. கொள்ளிடம் ஆற்றில் ஏற்கெனவே ஒரு கூட்டுக் குடி நீர் திட்டம் பல ஆண்டுகளாக உள்ளது. வீடுகளுக்கு 2 குதிரைத் திறன் (எச்.பி) மோட்டார் அமைத்தால், விவசாய பம்பு செட்டுகளுக்கு 5 எச்.பி மோட்டார் அமைப்பார்கள். ஆனால், கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான நீரேற்று நிலையத்தில் 200 எச்.பி மோட்டார் அமைக்கப்பட்டு, நிமிடத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால், கோடைக்காலத்தில் ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. பம்பிங் ஸ்டேசன் மோட்டாரை இயக்கினால், விவசாய பம்ப் செட்டுகள் நின்றுவிடும். இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஒரு பக்கம் மூன்று முறை மணல் குவாரிகள் அமைத்து மணலை அள்ளினர். மறு பக்கம் ராட்ச ஆழ்துளைக் குழாய் மூலம் தண்ணீரை உறிஞ்சியதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. வீட்டுக்கு அஸ்திவாரம் போட்டாலே தண்ணீர் ஊறும் எங்கள் பகுதியில், 60 அடி ஆழத்திற்கு மேல் ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு, கால் நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுகிறது. விவசாய பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்டுகளுக்கு இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றில், மேலும் ஒரு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு கிராம மக்கள் அனைவரும் கூடி, எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினோம். இதையடுத்து ஆழ்துளை அமைக்கும் பணிகளை நிறுத்தி, திட்டத்தை கைவிட்டனர். ஆனால், மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இப்போது எந்தவித அறிவிப்பும் இல்லாமல், சோதனை செய்கின்றனர். ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், புதிய திட்டம் எதுவும் வேண்டாம் என்று கூறித்தான் போராட்டம் நடத்துகிறோம். திட்டத்தைக் கைவிடும் வரை, தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்," என்றார்.

மணல் குவாரிகளால் பாதிப்பு

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த திவ்ய பாரதி கூறுகையில், ''மணல் குவாரிகள் மற்றும் பம்பிங் ஸ்டேசனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியின் போது, காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையில் இருந்தாலும் எங்கள் பகுதியில் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தொடர்ந்து ஆற்றில் தண்ணீர் வந்து, மழையும் பெய்வதால் பிரச்சினை இல்லை. ஆனால், மேலும், ஒரு குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தால், எங்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வோம். இந்த திட்டத்தை இங்குதான் அமைக்க வேண்டுமா? வேறு பகுதியில் அமைத்தால் என்ன? மணலையும் அள்ளி, இருக்கும் தண்ணீரையும் உறிஞ்சினால் எங்கள் வாழ்வாதரத்திற்கு என்ன செய்வது? கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பம்பிங்க் ஸ்டேசன் அமைக்க சோதனை செய்தபோது நடந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் எங்களோடு பங்கேற்றார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், இது அரசுத் திட்டம், கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்கிறார். குடிநீர் திட்டமே வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், வேறு பகுதியில் அமையுங்கள் என்றுதான் சொல்கிறோம்'' என்கிறார் திவ்ய பாரதி.

எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் விளக்கம்

இது குறித்து திருவையாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகரனிடம் கேட்டபோது அதற்குப் பதில் அளித்த அவர், ''கொள்ளிடம் ஆற்றில் திருச்செனம்பூண்டி உட்பட, 30க்கும் மேற்பட்ட கூட்டுக்குடி நீர்த் திட்டங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரிக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நானும் பங்கேற்றேன். இப்போது மணல் குவாரி அங்கு இல்லை. இந்நிலையில், திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட பூதலூர் வட்டத்தில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இன்னும் சரியான குடி நீர் வசதி கிடைக்கவில்லை. இதற்காகத்தான் தற்போது இந்த கூட்டுக் குடி நீர் திட்டத்தை கொண்டு வர வேண்டியுள்ளது. குடி நீர் திட்டத்திற்காக மட்டும்தான் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படுகிறது.

அதேநேரத்தில், நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க, இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் 3 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளன. அவை, தடுப்பணையாக மட்டும் இல்லாமல், அங்கே பாலம் அமைத்து போக்குவரத்து வசதியும் செய்யப்படவுள்ளது. இதே போல், மணல் குவாரிகளால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மணற் கொள்ளையைத் தடுக்கும் வகையில், கல்லணை - கீழணை வரை கொள்ளிக் கரையில் இரு வழிப்பாதை அமைத்து, போக்குவரத்து வசதி ஏற்படுத்தி, தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்த உள்ளோம். எனவே திருச்செனம்பூண்டி கிராம மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், இந்த குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் பாதிப்பு இருக்காது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்,'' என்றார்.

தடுப்பணைகள் அமைக்க ஆய்வு

மேலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தற்போது உள்ளன. திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் காவிரி ஆற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தடுப்பணையால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. எனவே தேவைக்கு ஏற்ப, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.