ஸ்ரேயா நடனமாடிய பாடல்; வாடிவாசல் அப்டேட்; `ரெட்ரோ' இசை வெளியீட்டு விழா எப்போது?
மூன்று பாடல்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒரு பாடல், அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும். இதுவும்...

சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் 'ரெட்ரோ' வருகிற மே மாதம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் அதன் முதல் சிங்கிளான 'கண்ணாடிப் பூவே' வெளியாகி வரவேற்பை அள்ளியது. இந்நிலையில் 'ரெட்ரோ'வின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரக் காத்திருக்கின்றன.
ரெட்ரோ
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்குப் பின் கார்த்திக் சுப்புராஜ், சூர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் 'ரெட்ரோ'. இதில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், நந்திதா தாஸ், சுஜித் சங்கர், 'டாணக்காரன்' தமிழ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஒரு பாடலுக்கு ஸ்ரேயா நடனம் ஆடியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, ஜோஜூ
சமீபத்தில் வெளியான 'கண்ணாடி பூவே' பாடலை விவேக் எழுதியிருந்தார். பாடலை சந்தோஷ் நாராயணனே பாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த அப்டேட் ஆக, இன்னொரு பாடல் வெளியாகவிருக்கிறது. அடுத்து வெளியீடுவதற்கு மூன்று பாடல்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒரு பாடல், அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும். இதுவும் லிரிக் வீடியோ என்கின்றனர். அதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். நேரு ஸ்டேடியமாக இருக்கலாம் என்றும், இந்த விழாவில் டிரெய்லரும் வெளிவருகிறது எனவும் தெரிவிக்கின்றனர். விழா மேடையில் அனைத்து பாடல்களும் நேரடியாக பாட உள்ளனர் என்றும், 'வாடி வாசல்' படபிடிப்பு குறித்து சூர்யா அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது சிங்கிள், அனேகமாக ஸ்ரேயா ஆடியிருக்கும் பாடலாக இருக்கக்கூடும் என்ற பேச்சும் இருக்கிறது. இப்போது ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யாவின் 45வது படமான இதில், த்ரிஷா, ஷிவதா, 'லப்பர் பந்து' ஸ்வாசிகா, யோகிபாபு, நட்டி நடராஜ், மலையாள நடிகர் இந்திரன்ஸ் எனப் பலரும் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, இப்போது நிறைவு கட்டத்தை நோக்கி முன்னேறுகிறது. இதற்கிடையே சூர்யாவிடம் 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' வெங்கி அட்லூரியும் சூர்யாவிடம் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.