தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்! புள்ளி விவரத்துடன் சு.வெங்கடேசன் எம்.பி.!

Discrimination in allocating funds to Southern Railway! S. Venkatesh MP with statistics! தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்! புள்ளி விவரத்துடன் சு.

தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்! புள்ளி விவரத்துடன் சு.வெங்கடேசன் எம்.பி.!

சென்னை: தெற்கு ரயில்வேவை காட்டிலும் வடக்கு ரயில்வேக்கு 101 மடங்கு அதிகம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை புள்ளி விவரத்துடன் கூறி, ரயில்வே அமைச்சகத்தை வெளுத்து வாங்கியிருக்கிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

தண்டவாளங்கள் மேடுபள்ளம் இல்லாமல் சமமாக இருக்க வேண்டியது இரயிலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிக முக்கியம் நிதி ஒதுக்கீட்டிலும் வடக்கிற்கும் தெற்கிற்கும் சம பங்கீடு இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகம் , கேரளம் உள்ளிட்ட தெற்கு ரயில்வே பகுதியில் புதிய வழித்தடத்திட்டத்திற்கு வெறும் 59 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது . ஆனால் வடக்கு ரயில்வேயின் புதிய வழித்தடத் திட்டத்திற்க்கு 14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நான் ஊடகத்தில் வெளிப்படுத்தியிருந்தேன்.

இதற்கு பதிலளிக்க வேண்டியது ரயில்வே அமைச்சகம். ஆனால் தெற்கு ரயில்வே நிர்வாகமோ தமிழகத்துக்கு ஏராளமாக நிதி ஒதுக்கப்பட்டது போல செய்தி வெளியிட்டுள்ளது.

நான் வெளியிட்ட அறிக்கையில் இரட்டைப் பாதை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்றிருந்தேன். மதுரை கன்னியாகுமரி பாதை 21- 22 ல் முடியும் என்ற அறிவிப்பு அமலாகவில்லை என்பதையும், குறைந்தது இன்னும் இரண்டாண்டுகளிலாவது இதை முடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். இதற்கு பதில் அளிக்காமல் சதவீதக் கணக்கிற்குள் புகுந்து உண்மையை மறைக்க முயல்கிறது தெற்கு இரயில்வே.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளுக்கு தெற்கு ரயில்வேக்கு 7 ஆயிரத்து 114 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . இது கடந்த ஆண்டுகளை விட கூடுதல் என்று கூறியுள்ளார்கள். ஆனால் வடக்கு ரயில்வேக்கு 66 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை ஏன் மறைக்கிறார்கள். முழு உண்மையை சொல்வதாக இருந்தால் கடந்த நான்கு ஆண்டுகள் புதிய வழித்தடத்திட்டத்திற்கான ஒதுக்கீடு என்பது தெற்கு இரயில்வேக்கு வெறும் 308 கோடி மட்டுமே ( 2019-20ல் 52 கோடி, 2020-21ல் 102 கோடி, 2021-22 ல் 95 கோடி, 2022-23ல் 59 கோடி) ஆனால் வடக்கு இரயில்வேயின் புதிய வழித்தடத்திட்டத்திற்கு ஒதுக்கீடு 31,008 கோடி ( 2019-20ல் 994 கோடி, 2020-21ல் 7,278 கோடி, 2021-22ல் 9,454 கோடி, 2022-23ல் 13,282 கோடி) ஆகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வழித்தடத் திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டுக் கணக்கைப் பார்த்தால் தெற்கு இரயில்வேயை விட வடக்கு இரயில்வேக்கு 101 மடங்கு அதிகம் உள்ளது. இந்த உண்மையை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, தமிழகத்திற்கும், தெற்கு இரயில்வேக்கும் போதிய நிதி ஒதுக்கவும், புதிய வழித்தடத் திட்டங்களை விரைவுபடுத்தவும், தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தி கூடுதல் தொகை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதற்காக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு தெற்கு இரயிவேக்கு ஒதுக்கப்பட்ட நிதி சற்று கூடுதலாக இருப்பதற்கு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையையொட்டி நாங்கள் நடத்திய போராட்டம் முதன்மையான காரணம். நாடாளுமன்றத்திலும், நிலைக்குழு கூட்டங்களிலும் தெற்கு இரயில்வே புறக்கணிக்கப்படுவதை இடைவிடாது சுட்டிக் காட்டியுள்ளோம்.