குமரியில் பனை விதை நடும் ஒத்திகை நிகழ்வு

Palm seed planting demonstration event at Kumari

குமரியில் பனை விதை நடும் ஒத்திகை நிகழ்வு

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரின் நீடா அமைப்பு முன்னெடுத்த ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் நெடும் பணி அக்டோபர் ஒன்றாம் தேதி நடக்கவிருப்பதை முன்னிட்டு வருகின்ற 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்களிடம் பனை விதைகளை கொடுத்து நிகழ்வினை ஆரம்பித்து வைக்கிறார்கள். பனை விதைகள் நடும் நெடும் பணிக்காக குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை முதல் கொல்லங்கோடு சின்னத்துரை கடற்கரை வரை உள்ள கடலோர பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 2 லட்சம் விதைகளுக்கு மேல் திருநெல்வேலி பணகுடி வள்ளியூர் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பனை விதைகள் நடும் நிகழ்வின் முன்னோட்ட பணியாக மாணவர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் பனை விதை நடும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கொடுக்கும் பொருட்டு பனை விதை நடும் ஒத்திகை நிகழ்வு தெங்கம்புதூர் சொத்தவிளை கடற்கரையில் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் தெ. தி. இந்து கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர், கல்லூரியின் முதல்வர் முனைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன் மற்றும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி இயக்கத்தின் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்களும் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக நாகர்கோவில் மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி அவர்கள் பங்கு பெற்று ஒத்திகை நிகழ்வின் முதல் விதையை விதைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் திவ்யா மற்றும் யூஜின் பிரின்ஸ் அவர்களும் இணைந்து சிறப்பாய் செய்திருந்தனர். குமரி மாவட்டத்தில் வரும் ஒன்றாம் தேதி கோவளம் , பெரியக்காடு முதல் லெமுரியா, சொத்தவிளை, குளச்சல், ராஜாக்கமங்கலம், தேங்காய்பட்டினம், முட்டம், மண்டைக்காடு , சின்னத்துரை போன்ற கடலோர பகுதிகளில் மாணவர்கள் , தன்னார்வலர்கள் , குமரி ஜவான்ஸ் , இயற்கையே இறைவன், ஷாலோம் அமைப்பு, தவப்புதல்வி அறக்கட்டளை, மலர் குழு போன்ற தொண்டு நிறுவனங்கள் இணைந்து பெரு வாரியாக பங்கு பெற்று பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் பனை விதைகள் நடும் நெடும் பணியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை தெரிவித்தார். சொத்தவிளை கடற்கரையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் 80 பேர், பஞ்சாயத்து தலைவர் சத்தியவதி பாலசுந்தரம், 14வது வார்டு கவுன்சிலர் முருகன், தேசிய பசுமை படையின் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரகாஷ், தெ.தி.இந்து கல்லூரியின் பேராசிரியர்கள் முனைவர் மது, மற்றும் முனைவர் பழனிக்குமார், பஞ்சாயத்து உத்தியோகஸ்தர்கள், அலுவலக பணியாளர்கள், தெங்கம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் என சுமார் 120 பேர் கலந்து கொண்டனர்.