கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடவுப்பணி விஜய்வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார்
Planting of one lakh palm seeds on the coast of Kanyakumari district Vijayvasant MP. Initiated
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் புனித ஜாண்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து 2023 - 2024 வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும்,
பனைத் தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கும் ரூபாய் 17 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பாராட்டு விழா, 27.06.2023 அன்று கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடவு பணி துவக்க விழா மற்றும் பனை மரங்கள் விழிப்புணர்வு கருத்தரங்கும் நடத்தினர். இவ்விழாவில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி நிறுவனர் அருட்தந்தை ஜான் போஸ்கோ முன்னிலை வகித்தார்.
தவப்புதல்வி நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை பனை மரமும் தமிழர் வாழ்வியலும் குறித்து பேசினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி இயற்கை உணவின் முக்கியத்துவம் குறித்து பேசினார் . சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஹச்.வி.விஜய்வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : பனை வெறும் மரம் மட்டுமல்ல. தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாட்டுச் சின்னம். தமிழகத்தின் மாநில மரம். நிலத்தடி நீரை பாதுகாக்கவும் , மண் அரிப்பை தடுக்கவும், புயல் , சூராவளிகளில் இருந்து மக்களை பாதுகாக்க பனை பெரிதும் உதவுகிறது. பனையிலிருந்து அபூர்வமான மருத்துவ குணமிக்க பதநீர், நுங்கு , பனங்கிழங்கு, பனங்கருப்பட்டி , பனங்கற்கண்டு , பனம்பாகு போன்ற பொருட்கள் கிடைக்கிறது. பனையிலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே மனித குலத்திற்கு பயன் படக்குடியவை. அதனால் தான் பனையை கற்பக விருட்சம் என்று அழைக்கிறோம். பனை வளர்ப்பை மேம்படுத்த தமிழக அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுகிறது என்று பேசினார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஹச்.வி.விஜய்வசந்த் அவர்கள் பனை விதை நடுதல் மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்தமையை பாராட்டி அமைப்பாளர்களுக்கு , கல்லூரிக்கும் சான்றிதழ் வழங்கினார். வெட்டுமடை கடற்கரையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடவுப்பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜான் , வேளாண்மை துறை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன், நாட்டு நலப்பணித்திட்ட பேராசிரியர் முனைவர் ஜெய் அருள் ஜோஸ், தொழில்முனைவோர் மேம்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேவிட், சமூக சேவகி குமாரி கலா ஆகியோர் கலந்துகொண்டு பனை விதைகளை விதைத்தனர். நிறைவாக கல்லூரி முதல்வர் எட்வின் ஞாணதாஸ் நன்றி கூறினார். ஷாலோம் அறக்கட்டளை நிறுவனர் டினோ, சமூக அமைப்பாளர் ராஜேஸ்வரி, ஆகியோர் நிகழ்ச்சிக்கான முன்னேற்ப்பாடுகளைச் செய்திருந்தனர். நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் வெகுவாக கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் அமைப்பாளராக இருந்து முனைவர் சுபத்ரா செல்லத்துரை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.