எரிந்த நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு: மேட்டூர் போலீஸார் விசாரணை
மேட்டூர்: மேட்டூர் அருகே கொளத்தூர் அடுத்த காரைக்காட்டில் எரிந்த நிலையில் வீட்டில் உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர் அருகே கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி சின்னப் பொண்ணு (75). இவரது கணவர் மாதையன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்ட நிலையில், மணி என்ற தனது பேரனுடன் மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில், மூதாட்டி நேற்று இரவு உறங்கச் சென்ற நிலையில், இன்று காலை தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மூதாட்டி சின்ன பொண்ணு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பேரன் மணி கொளத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்கிய ராஜ் மற்றும் கொளத்தூர் போலீஸார், எரிந்த நிலையில் இருந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, சேலத்தில் இருந்து மோப்ப நாய் கொண்டு வரப்பட்ட நிலையில், வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்பி வந்து விட்டது. மேலும், தடய அறிவியல் துறை அதிகாரிகள் வீட்டில் இருந்த கை ரேகை மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

மேலும், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரின் குழாய் எரிந்தும், அருகே எரிந்த நிலையில் துணியும் கிடந்துள்ளது. அதனையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் கிடைக்காத நிலையில், மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பேரன் மணியை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



