ஆரணி அருகே பெண்ணை கொன்று புதைத்தவர் கைது

ஆரணி அருகே பெண்ணை கொன்று புதைத்தவர் கைது
ஆரணி அருகே பெண்ணை கொன்று புதைத்தவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அருகே முதலீமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்பன். இவரது மனைவி தீபா(40). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த தீபா கள்ளத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது, தீபாவுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (50) என்பவருக்கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபா கடந்த மே மாதம் திடீரென காணாமல் போனார். இது குறித்து தீபாவின் தந்தை கோவிந்த சாமி திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.அதன்பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் ராமசாமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் ராமசாமி நேற்று முன்தினம் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்து, தீபாவை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ராமசாமியை காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது, ராமசாமியும், தீபாவும் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்பில் இருந்ததாகவும் பெங்களூருவுக்கு வேலைக்கு சென்ற தீபாவுக்கும் வேறு ஒரு நபருக்கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ராமசாமி ஆரணி அருகே எட்டிவாடி காப்பு காட்டுக்கு தீபாவை அழைத்துச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கேயே புதைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர், களம்பூர் காவல் காவல் துறையினர் எட்டிவாடி வனப்பகுதியில் தீபாவின் உடல் புதைக்கப்பட இடத்தில் தோண்டியபோது, அங்கு அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவர்கள் குழுவினரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து, பிரேதப் பரிசோதனை செய்து அவரது குடும்பத்தினரிடம் உடலை காவல்துறையினர் ஒப்படைத்தனர். பின்னர் களம்பூர் காவல் துறையினர் ராமசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.