சென்னை | தொழில் அதிபரை மயக்கி நகைகள் திருட்டு: இளம்பெண் நண்பருடன் கைது
சென்னை: தொழில் அதிபரை மயக்கி நகைகளைத் திருடிய இளம்பெண் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் மணி. தொழில் அதிபரான இவர் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த மாதம் 27-ம் தேதி, பெண் தோழி ஒருவருடன் தேனாம்பேட்டையில் உள்ள ஓர் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, அந்த பெண்ணையும் காணவில்லை. அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியையும் காணவில்லை.

அதிகளவு மது ஊற்றிக் கொடுத்து மயங்க வைத்து, தங்கச் சங்கிலியை அந்தப் பெண் திருடிச் சென்றது அவருக்குத் தெரியவந்தது. இதுகுறித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மணி புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், தப்பி ஓடியது குன்றத்தூர் சிவன்தாங்கல் பகுதியில் வசித்துவரும் தீபிகா என்ற தீபலட்சுமி (22) என்பது தெரியவந்தது. இவர், தனது கூட்டாளியான மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சதிஷ்குமார்(23) என்பவருடன் சேர்ந்து, பல தொழில் அதிபர்களிடம் இதே பாணியில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
திருட்டு நகையை விற்று, அதன்மூலம் கிடைத்த பணத்தில் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளனர். வாகனத்தையும், ரூ.3.14 லட்சம் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.



