காவல்துறையில் 17 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

Dismissal of case seeking restraining order on transfer of 17 officers in the police force

காவல்துறையில் 17 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் காவல்துறையில் 17 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுகவின் தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பத்துரை தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 19-ம் தேதி நடத்தபடும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பாணை வெளியிடபட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன் பிறகு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு தான் அதிகாரம் உள்ளது .

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக கடந்த 29-ம் தேதி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் காவல்துறையில் 17 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த உத்தரவு தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக உள்ளதால் 17 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளவரை தமிழக அரசும், டிஜிபியும் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடமாற்றம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரிகள், நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு இல்லை என்றும், அதிகாரிகள் மீது சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஏற்கனவே 17 அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். அப்போது மனுதாரர் யார் என நீதிபதிகள் கேட்டதற்கு, அவர் வழக்கறிஞர் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ. என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கறிஞர்கள் பொது நல வழக்குகள் தொடர்வதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளதாக கூறிய நீதிபதிகள், அரசியல் காரணமாக தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பொது நல வழக்கு அல்ல என்றும், தனிநபர் நல வழக்கு என்றும் கண்டனம் தெரிவித்தனர்.

பொது நல வழக்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக இன்பதுரை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.