சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் பேச்சு; தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை*
Thirumavalavan talks with Chief Minister MK Stalin at Anna Arivalayam, Chennai Important advice on block allocation *
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாள் என்பதால் நேற்று நிறைய சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்கள் திங்கட்கிழமைக்கு பிறகு வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியான திமுக, கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்கள் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பின் போது மாநில துணை செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. முதல்வருடனான சந்திப்புக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: முதல்வரை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தோம். அத்துடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட அளவில் ஆங்காங்கே திமுக மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி கட்சிகளின் சார்பில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. விசிக சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் விசிகவுக்கு தேவையான தொகுதிகளை பட்டியலிட்டு, திமுக மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக 2, 3 நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் விசிகவுக்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் தலைவர், துணை தலைவர் போன்ற பதவிகளை நியமனம் செய்கிற போது, விசிகவுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கின்றோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அகில இந்திய அளவில் சமூக நீதியை பாதுகாக்க ஒரு கூட்டமைப்பை உருவாக்க போவதாக அறிவித்திருந்தார். அது வரவேற்கக்கூடிய ஒன்று. அந்த நிலைப்பாட்டை விசிக சார்பில் வரவேற்று பாராட்டினோம். மிக சீரிய முயற்சி. அனைத்து ஜனநாயக சக்திகளாலும் வரவேற்க கூடிய ஒன்று, பராட்டக்கூடிய ஒன்று. அதே போல அரியலூர் மாணவி லாவண்யா பிரச்சனையில் மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிரான கலங்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அவர்களின் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற வேண்டுகோளையும் நாங்கள் முன் வைத்தோம். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்றவற்றில் 50% பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய நிலைப்பாடு போற்றுதலுக்குரியது. சமூகத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக பெண்களிடத்திலே பெரிய அளவில் உற்சாகம் நிலவி இருக்கிறது. மகிழ்ச்சி நிலவி இருக்கிறது. அதையும் சுட்டிக்காட்டி வரவேற்று பாராட்டினோம். பெரியார் பிறந்த மண்ணில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர வேண்டும். ஏற்கனவே தலைவர் கலைஞர் அதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார். கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் கூட அந்த சட்டம் நடைமுறையில் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, தமிழகத்தில் அத்தகைய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று முதல்வரின் கவனத்தில் வைத்துள்ளோம். பேச்சுவார்த்தை முடிந்து 1ம் தேதிக்கு பிறகு விசிக சார்பில் மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.