நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு

நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஹரிஹரன், ஜெயக்குமார், மணிவேல், மணிகண்டன்.

திருவாரூர்: நன்னிலம் அருகே குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகேயுள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பா.ஜெயக்குமார் (30), ர.ஹரி ஹரன் (30), மேலத் தெரு சே.மணிகண்டன் (30), முருக்கன்குடி முதல்கட்டளை அ.மணிவேல் (28). இவர்கள் 4 பேரும் நேற்று மாலை நன்னிலத்தை அடுத்த கீழ்குடி பகுதியில் உள்ள புத்தாற்றில் குளிப்பதற்காக காரில் வந்தனர்.

பின்னர் அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீரின் வேகம் சற்று அதிகமாக இருந்தது. இதனால் 4 பேரையும் தண்ணீர் இழுத்துச் சென்றதால், அனைவரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றில் இறங்கி காப்பாற்ற முயன்றனர். ஆனாலும், அவர்களது முயற்சி பலனளிக்காமல் 4 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த நன்னிலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் உயிரிழந்த மணிகண்டன், அய்யம்பேட்டை அருகே உள்ள மானந்தங்குடி ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். ஹரிஹரனுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். மற்ற இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.