சட்டவிரோத வருவாயை பிரிக்கவே மாதந்தோறும் கூட்டம்: கனிமவள அதிகாரிகள் மீது நீதிபதி கடும் அதிருப்தி
மதுரை: சட்டவிரோத வருவாயை தங்களுக்குள் பிரித்துக் கொள்ளவே கனிம வளத்துறை அதிகாரிகள் மாதந்தோறும் கூட்டம் நடத்துவதாக உயர் நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மாற்றுத் திறனாளியான நான், 2018-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளையில் கணக்காளராகச் சேர்ந்தேன். 2022-ம் ஆண்டில் மாரியம்மாள் என்பவர் உதவி இயக்குநராக பொறுப்பேற்றார்.
அவர் தற்காலிக பணியில் இருந்த என்னை நீக்கினார். பிறகு அவருக்கு உதவியாளராகப் பணிபுரியுமாறும், அதற்கு ஊதியம் தருவதாகவும் கூறினார். அதன்படி, அவருக்கு உதவியாளராகப் பணிபுரிந்தேன். குவாரி உரிமையாளர்கள் எனது வங்கிக் கணக்கில் செலுத்தும் லஞ்சப் பணத்தை வாரத்துக்கு ஒருமுறை எடுத்து உதவி இயக்குநர் மாரியம்மாளிடம் ஒப்படைத்து விடுவேன். அப்போது போலி நடைச்சீட்டு வழங்கியதாக புகார் எழுந்தது. அதற்கு நான்தான் காரணம் என மாரியம்மாள் கூறினார்.
இதனால் அவரது தூண்டுதலின் பேரில் குவாரி உரிமையாளர்கள் கொடுத்த லஞ்சப் பணத்தை என்னிடம் கேட்டு கொலை மிரட்டல் விடுகின்றனர். எனக்கும், என் தாயார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
60-க்கும் மேற்பட்ட குவாரி உரிமையாளர்களிடம் இருந்து மாரியம்மாள் வங்கிக் கணக்கு மூலம் லஞ்சப்பணம் வாங்கியதற் கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எனவே எனக்கும், எனது தாயாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். தனிப்பட்ட முறையில் குவாரி உரிமையாளர்களிடம் இருந்தும் மனுதாரர் ஆதாயம் அடைந்துள்ளார். எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்” என்றார்.
மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடும்போது, “கனிமவள உதவி இயக்குநர் மாரியம்மாள், லஞ்ச வழக்கால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பல்வேறு குவாரி உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதற்கு ஆதாரங்கள் உள்ளன.
தற்போது, அவர் தேனி மாவட்டத்தில் பணியில் இருப்பதால் இந்த மாவட்டத்தில் இருந்து சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன” என்றார். இதையடுத்து நீதிபதி, “கனிம வள அதிகாரிகள் கூட்டம் நடத்துவதே, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம் வருகிறது? அதை எப்படி பிரித்துக் கொள்வது என்பதற்காகத்தான்.
அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் அரசுக்குச் சேர வேண்டிய வருவாயைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. மனுதாரர் வங்கிக் கணக்கில் குவாரி உரிமையாளர்கள் எதற்காக பணம் செலுத்தினர்? இதன் மூலம் யார் ஆதாயம் அடைந்தனர்? என்று அம்பாத்துறை காவல் ஆய்வாளர் விரிவாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறும்பட்சத்தில் இந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும். இந்த வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்தினால், அரசுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பெற்றுத்தர முடியும். இந்த விசாரணைக்கு தேவையான உதவிகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்ய வேண்டும். விசாரணை ஆக.22-க்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.



