நோயாளிகளின் உடல் உறுப்புகளை விற்பது கொடூரமானது - மதுரை ஐகோர்ட்டு
மதுரை,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி சில தனியார் ஆஸ்பத்திரிகளின் ஒத்துழைப்புடன் சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் புரோக்கர்கள் மூலம் தொழிலாளர்களை அணுகி சிறுநீரகம் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

புகாருக்கு உள்ளான ஈரோடு, திருச்சி உள்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த வகையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், அங்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 6 நபர்களின் பெயர் பட்டியலை கண்டறிந்தனர். அந்த பட்டியலை அவர்கள் நாமக்கல் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், சிறுநீரக விற்பனை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உடல் உறுப்புகளை மருத்துவர் எடுத்து விற்பனை செய்வது கொடூரமானது, அபாயகரமானது. மனித உடலுறுப்புகளை பிற பொருட்களைப் போல விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல.
கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?. ஏழை மக்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து உடல் உறுப்புகளை சிலர் வாங்குவது தெரியவந்துள்ளது. உடல் உறுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து கிட்னி விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலர் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


Yasmin fathima

