கேரளாவில் சிக்கியுள்ள போர் விமானத்தை மீட்க முடியாமல் பிரிட்டன் தடுமாறுகிறதா? என்ன நிலவரம்?
பிரிட்டனை சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஒன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சிக்கிக் கொண்டிருக்கிறது. இது பேசுபொருளாவதுடன், ஒரு நாட்டின் நவீன விமானம் எப்படி வெளிநாட்டில் பல நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
எஃப்-35பி விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூன் 14ஆம் தேதி தரையிறங்கியது. இந்திய பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலையில் சிக்கிக்கொண்ட விமானம், பிரிட்டன் ராயல் கடற்படையின் ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலுக்கு திரும்ப முடியாத சூழலில் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
அங்கு அது பாதுகாப்பாகத் தரையிறங்கியது, ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானத்தால் கப்பலுக்குத் திரும்ப முடியவில்லை.
விமானம் தரையிறங்கிய பின்னர் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலின் பொறியாளர்கள் குழு வந்து அதை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அவர்களால் இதுவரை விமானத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்ய முடியவில்லை

விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு பழுதுநீக்கல் வசதிக்கு விமானத்தை நகர்த்த முன்வைக்கப்பட்ட திட்டத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறப்புக் கருவிகளுடன் பிரிட்டன் பொறியாளர்கள் குழு வந்தவுடன் விமானம் ஹேங்கருக்கு (விமானத்தை நிறுத்தி வைக்கும் இடம்) கொண்டு செல்லப்படும். இதன் மூலம் மற்ற விமானங்களின் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படும்," என பிரிட்டன் தூதரகம் அறிக்கையில் தெரிவித்தது.



