கிராமப்புற பெண்களின் உற்பத்திக்கான விற்பனை அங்காடி திறப்பு விழா
Inauguration of a shop for rural women's produce
தவப்புதல்வி கிராமப்புற பெண்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை அங்காடி திறப்புவிழா மற்றும் இணையவழி சந்தையிடுதல் குறித்த வழிகாட்டுதல் பயிற்சி நாகர்கோயில் ஷாலோம் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. தவப்புதல்வி அமைப்பின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை கருத்துரை ஆற்றினார்.
சமூக ஆர்வலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பெண்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அங்காடி மட்டுமின்றி டிஜிட்டல் மார்க்கெட்டிங் யுக்திகளும் பெருமளவும் உதவும் என்கிற மைய கருத்தில் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.
இன்று தொடங்கப்பட்ட ஷாலோம் யூனிட் பெண்களின் உற்பத்தி பொருட்களை உள்ளூர் அளவில் மட்டுமல்ல உலகளவில் எடுத்து செல்லும் என ஷாலோம் அறக்கட்டளை நிறுவனர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் உணவு பொருட்கள், கைவினை பொருட்கள் மற்றும் பல மதிப்புக்கூட்டு பொருட்களின் கண்காட்சி மற்றும் அறிமுகமும் நடைபெற்றது. தவப்புதல்வி மற்றும் ஷாலோம் அறக்கட்டளை சார்பில் பத்து நாட்கள் கலை மற்றும் தொழில் முனைவோர் விற்பனை மற்றும் கண்காட்சி அடுத்த மாதம் நடைபெறும் எனவும் இதில் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் சீர்மிகு குமரி எனும் மையகருத்தில் தினமும் மாலை கருத்தரங்கம் நடைபெறும் எனவும் தவப்புதல்வியின் நிறுவனர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.