முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் உள்ளது. விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் அடிப்படையில் விருதுநகரில் வழக்கு பதியப்பட்டது. இதில் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார் முன்ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பளித்தார். அதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கிடைக்காத காரணத்தால் தற்போது ராஜேந்திர பாலாஜி கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திர பாலாஜி சில நிமிடங்கள் மட்டும் கலந்து கொண்டு உடனடியாக காரில் விரைந்து சென்றார். ராஜேந்திர பாலாஜி போலீசாரிடம் கைதாகமால் இருக்கவே ஆர்ப்படாட்டத்தின் நடுவில் அவர் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனிடையே ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய தீவரமான பணிகள் நடைபெற்று வருகிறது.