இன்றைய இலக்கியம் நற்றிணை
நற்றிணை- நெய்தல் திணை
பாடல்-11

காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; . . . .
புணரி பொருத பூ மணல் அடைகரை,
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.
- உலோச்சனார்.
பொருளுரை:
அவர் செய்த குறி இடையீடுபட்டுத் தவறுதலாலே; சூடாது கிடந்த பூமாலை போல நின் மெய் வாடினையாகி; அயலில் எழுதலையுடைய பழிச் சொல்லைக் கருதி; இனித் திண்ணமாக அவர் நம் பால் வருவாரல்லர் என்னும் புலவியை உட்கொள்ளாது; நின் நெஞ்சத்து அதனை ஒழிப்பாயாக! புணரி பொருத பூ மணல் அடைகரை அலைவந்து மோதிய இளமணல் அடுத்த கடற்கரையின் கண்ணே; தாம் ஊர்ந்து வருகின்ற தேரின் ஆழியிடத்துப் படாதவாறு ஞெண்டுகளை விலக்கிப் பாகன் வாரைப் பிடித்து ஆராய்ந்து செலுத்துமாறு, கானலான் நிலவு விரிந்தன்று கானலிடத்து நிலவு விரிந்தது காண்!
.



