இதுதான் தொடக்கம்!" தங்கம் விலை ரூ.11,000க்கு பறக்குமாம்.. ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேட்டால் தலையே சுத்துது

இதுதான் தொடக்கம்!" தங்கம் விலை ரூ.11,000க்கு பறக்குமாம்.. ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேட்டால் தலையே சுத்துது
தங்கம் விலை கடந்த சில வாரம் வரை ஓரளவுக்கு நிலையாக இருந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரம் வரை ஓரளவுக்கு நிலையாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மீண்டும் ஜெட் வேகத்தில் உயர ஆரம்பித்துவிட்டது. டிரம்ப் அள்ளி வீசும் வரிகளே இதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை எந்தளவுக்கு உயர வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து விளக்கியுள்ளார்.

தங்கம் விலை இப்போது ஓரளவுக்கு நிலையாக இருக்கிறது. ஆனால், டிரம்ப் முடிவால் தங்கம் விலை வரும் நாட்களில் மீண்டும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டிரம்ப்பின் அதிரடி முடிவுகளால் தான் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இப்போது வரை தங்கம் விலை 30%க்கு மேல் அதிகரித்துவிட்டது.

டிரம்ப் இப்போது மீண்டும் ரெசிப்ரோக்கல் வரி என்ற பூதத்தைக் கையில் எடுத்துள்ள நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரும் என்றே அஞ்சப்படுகிறது. இதற்கிடையே வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும்.. உயர்ந்தால் எந்தளவுக்கு உயரும்.. எப்போது உயரத் தொடங்கும் என்பது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை இங்கிருந்து அதிகரிக்கவே செய்யும். அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் மட்டுமே தங்கம் விலை குறையும். ஆனால் இப்போது அமெரிக்காவில் வட்டி வீதத்தைக் குறைப்பார்களா என்றே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் வட்டி விகிதம் 4.5% ஆக இருக்கும் நிலையில் அது 2.75% வரை குறையும். இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் நடக்கவே செய்யும்.

அடுத்த 18 மாதங்கள்

வட்டி விகிதம் 2% சரிவது அடுத்த 18 மாதங்களில் நடக்கும். அப்படி நடந்தால் தங்கம் விலை அதிகரிக்கும் அதேபோல அமெரிக்காவில் விலைவாசி அதிகரித்தாலும் கூட தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும். இப்படி எது நடந்தாலும் தங்கம் விலை உயரவே செய்யும். மெக்ரோ பொருளாதாரத்தில் எது நடந்தாலும் அது தங்கம் விலை உயர்வுக்கே சாதகமாக இருக்கிறது.

எந்தளவுக்கு உயரும்

இன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களில் தங்கம் விலை ரூ.10,700 முதல் ரூ.11,000 வரை போக வாய்ப்பு இருக்கிறது. 18 மாதங்களில் இந்த ரேஞ்சுக்கு போகலாம். அதேநேரம் அமெரிக்காவில் எப்போது வட்டி விகிதம் குறைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே இது இருக்கும். இப்போது அமெரிக்க மத்திய வங்கி கவர்னராக இருக்கும் ஜெரோம் பவுல் குறைக்காமல் இருந்தால் இதே நிலை அடுத்தாண்டு மே மாதம் வரை கூட நீடிக்கும். வட்டி குறைக்க டிரம்ப் அழுத்தம் தரலாம், ஆனால், அதைத் தாண்டி அங்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது..

செப்டம்பர் மாதத்திற்குள் அங்குப் பணவீக்கம் அதிகரித்துவிட்டால் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது. டிரம்பின் வரிகள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே இருக்கும். டிரம்ப் வரிகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியும் வரை தங்கம் எப்படிப் போகும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

பிரகாசமாக இருக்கு

அடுத்த மே வரை ஜெரோம் பவுல் தான் அமெரிக்க மத்திய வங்கி கவர்னராக இருப்பார். எனவே, அதுவரை எதுவும் நடக்காது. எனவே, உண்மையாக வட்டி குறைப்பு அடுத்தாண்டு ஜூன் மாதம் தான் வரும். அப்போது எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல். இதை நிலை இருந்தால் தான்.! ஒருவேளை அப்படி இருந்தால் ஒரு கிராம் தங்கம் ரூ.11,000 தாண்ட பிரகாசமாக வாய்ப்பு இருக்கிறது" என்றார்..

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.