தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் - பிரதமர் மோடி
நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம்
பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.
இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் 'வணக்கம் சோழ மண்டலம்' எனக்கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம். நாம் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
* நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம்
* ராஜேந்திர சோழன் புனித கங்கை நீரை எடுத்து பொன்னேரியை நிரப்பினார். காசியிலிருந்து கங்கை நீரை, மீண்டும் கொண்டு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
* தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்


Yasmin fathima

