ஒகேனக்கல்2 விவகாரம்: தமிழக அரசுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும்..அறிக்கை வெளியிட்ட ஓ.பன்னிர்செல்வம்
ஒகேனக்கல்2 விவகாரம்: தமிழக அரசுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும்..அறிக்கை வெளியிட்ட ஓ.பன்னிர்செல்வம்
சென்னை : ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என கூறியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என கூறியுள்ளார்.
மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது போல இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் இதற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு எழுந்தது.
இந்நிலையில் ஒகேனக்கல் 2 கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அமையக் கூடாது என்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் கர்நாடக முதல்வர் கூறியிருந்தார்.
ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதன் முதலில் 1986 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது 120 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற 120 கோடி மதிப்பிட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. 1994 ம் ஆண்டு 350 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்த போதும் நிதியுதவி கிடைக்காததால் அந்தத் திட்டம் நிறைவேற்றவில்லை என கூறியுள்ளார்.
மீண்டும் 1005 கோடியில் திட்டத்தை நிறைவேற்ற கருத்துருவை கடந்த 2005 ம் ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது எனவும், இதன் அடிப்படையிலேயே கடந்த 2008 ம் ஆண்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் 2011ம் ஆண்டு வெறும் 18 % பணிகள் மட்டுமே முடிவடைந்து இருந்தது என தனது அறிக்கையில் கூறியுள்ள ஓபிஎஸ், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 82 % பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2013 ம் ஆண்டு நாட்டுக்கு அர்பணித்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற முக்கிய காரணமாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அதிமுகவும் தான் என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு உபரி நீரை திறந்துவிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளவிருக்கும் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை என தனது அறிக்கையில் கூறியுள்ள ஓ.பன்னீர் செல்வம், தமிழ்நாட்டில் எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை எதிர்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள கர்நாடக அரசுக்கு அதிமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு என தனது அறிக்கையில் கூறியுள்ள முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம், இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவினை நல்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.