சென்னை ஐ.சி.எப். ஆலையில் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி நிறைவு

சென்னை ஐ.சி.எப். ஆலையில் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி நிறைவு
ஹைட்ரஜன் ரெயில் பல்வேறு கட்ட சோதனைக்காக விரைவில் டெல்லிக்கு அனுப்பப்பட இருக்கிறது.;

சென்னை,

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கியது. கடந்த மாதம் ஹைட்ரஜன் ரெயில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பல்வேறு கட்ட சோதனைக்காக விரைவில் டெல்லிக்கு அனுப்பப்பட இருக்கிறது.

இதுகுறித்து, ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது:-

நாட்டிலேயே முதல் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி முடிவடைந்துள்ளது. இந்த ரெயில் ரூ.118 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிகபட்சமாக 50 முதல் 80 கிலோ மீட்டர் துாரம் வரை மட்டுமே இயக்கப்படும். 10 பெட்டிகளை கொண்டதாக இந்த ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம்.

ரெயில் என்ஜின் 1,200 குதிரை திறன் சக்தி கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். கண்காணிப்பு கேமரா, கழிப்பறை, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இதில் இருக்கும். ஹைட்ரஜன் ரெயில் விரைவில் வடக்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர், பல கட்ட சோதனைக்கு டெல்லிக்கு கொண்டு செல்லப்படும். அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர் அரியானா மாநிலம் சோனிபேட் - ஜிந்த் இடையே இயக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்கள்.