ஆடி 4-வது வெள்ளி: கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் 108 கனி விளக்கு பூஜை

ஆடி 4-வது வெள்ளி: கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் 108 கனி விளக்கு பூஜை
கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கனி விளக்கு பூஜையைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.;

அம்மன் வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை வழிபாடு மிகவும் விஷேசமானது. ஆடி வெள்ளியன்று அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு நைவேத்யம் படைத்து வழிபடுவது வழக்கம். சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். அவ்வகையில் ஆடி மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோத்தகிரி கடைவீதி பகுதியில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, பௌர்ணமி நாட்கள் ஆடிப்பெருக்கு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கனி விளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். திருமண பாக்கியம் கிடைக்க, மடிப்பிச்சை பெற, ஆன்மீக வாழ்வு மலர, செவ்வாய் தோஷம் நீங்க, எதிரிகள் தொல்லை தீர, பில்லி சூனியம் செய்வினைகள் விலக, சமாதானம் நிலவ, தோஷங்கள் விலக, வறுமை நீங்க என பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற கனி விளக்கு பூஜை நடத்தப்படுவதாக ஐதீகம்.

அவ்வகையில் இன்று ஆடி 4-வது வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் கனி விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர். கோவில் அர்ச்சகர்கள் சக்திவேல், பார்த்திபன், பாலசுப்பிரமணி ஆகியோர் ஸ்லோகங்களை உச்சரிக்க, பெண்கள் அதே ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே தங்களிடமிருந்த குங்குமம் மற்றும் பூக்களை சிறிது சிறிதாக எடுத்து பழவகைகள் மற்றும் விளக்கின் மீது தூவி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் வடிவேல் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் வழிபாட்டுக் குழுவினர் செய்து இருந்தனர்.

இதே போல ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி கடைவீதி பண்ணாரி மாரியம்மன் கோவில், டானிங்டன் கருமாரியம்மன் கோவில் உள்பட கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.