‘இளைஞர்களின் எதிர்காலத்தை பட்ஜெட் உறுதி செய்துள்ளது’: மோடி உரை
‘Budget ensures future of youth’ Modi speech
இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2022 - 2023ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:
சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டானது அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டாக இருக்கின்றது.
பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் சிறப்பானதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்துள்ளது.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2.25 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருப்பது அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும். விவசாயிகள், ஏழைகள் பட்ஜெட் மூலம் பயன்பெறுவர்.
கங்கை கரையோரத்தில் இயற்கை விவசாயம் செய்ய ஊக்கவிக்கப்படுவதன் மூலம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கங்கை ஆறு ராசயனம் கலக்காமல் இருக்க உதவும்.
மக்களுக்கு பயனுள்ள பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட் குறித்து உரையாற்றுகிறேன் எனத் தெரிவித்தார்.