குமரியில் சித்தர்கள் பேரரசின் மாநில மத நல்லிணக்க மாநாடு
சித்தர்கள் பேரரசின் சார்பில் மாநில மத நல்லிணக்க மாநாடு குலசேகரம் கிருஷ்ணா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மாநாட்டிற்கு சித்தர்கள் பேரரசின் நிறுவனர் மற்றும் மாநாட்டுத் தலைவர் சங்கர் அய்யா தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மாநில தலைவர் அல் ஆமீன் சாகுல் ஹமீது வரவேற்புரை ஆற்றினார். சித்தர்கள் பேரரசின் தேசிய தலைவர் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை மாநாட்டின் தீர்மானங்களை வாசித்ததுடன், நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், சமய நல்லிணக்கத்தின் அவசியம் குறித்தும், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவ உணர்வுடனும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார்.
மாநாட்டில், முக்கிய மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது, முதலாவதாக "குமரிக்கண்டம் தொடர்பான வரலாற்று, கடலாய்வு, தொல்லியல் மற்றும் அறிவியல் ஆய்வுகளை விரிவாக மேற்கொள்ள மத்திய அரசின் உரிய துறைகள் மூலம் சிறப்பு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனவும், இரண்டாவதாக "தமிழ் ஆராய்ச்சி மற்றும் சித்தர் மருத்துவத்தை ஒருங்கிணைக்கும் வகையில் கன்னியாகுமரியில் தமிழ் ஆராய்ச்சி மற்றும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்” அமைக்க தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்" எனவும்,
மூன்றாவதாக "தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சித்தர் பேரரசு அமைப்பின் சார்பாக ஆசிரமம் உருவாக்கி, அவற்றின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு, மருத்துவம் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்க வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பாரத மக்கள் கட்சியின் தலைவர் முகமத் பக்ஸ், உதவும் கரங்கள் தலைவர் கன்னியப்பன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீலன், பிஷப் இம்மானுவேல் மற்றும் கணபதி சித்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சித்தர்கள் பேரரசின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கம், தமிழர் வரலாறு மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பு, சித்தர் மருத்துவ வளர்ச்சி மற்றும் சமூக சேவையை முன்னெடுக்கும் நோக்கில் நடைபெற்ற மாநாடு சிறப்பாக நிறைவுற்றது.



