கிராமப்புற பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் ‘தவப்புதல்வி’ திட்டம்

கிராமப்புற பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் ‘தவப்புதல்வி’ திட்டம்
கிராமப்புற பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் ‘தவப்புதல்வி’ திட்டம் அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் ஒருங்கிணைந்த பெண்கள் மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு – நிறுவனர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை

கிராமப்புற மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழும் பெண்களை திறன் பெற்ற தொழில் முனைவோராக உருவாக்கி, அவர்களின் பொருளாதார சுயநிறைவை உறுதி செய்யும் வகையில் ‘தவப்புதல்வி – கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அமைப்பு’ சார்பில் ஒருங்கிணைந்த பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கான முன்மொழிவு, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி K. ஜெகதீஸ்வரி அவர்களிடம் வழங்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், தவப்புதல்வி கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, கிராமப்புற பெண்களின் தற்போதைய பொருளாதார நிலை, அவர்களுக்கு நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் மற்றும் பெண்களை சுயதொழில் மற்றும் தொழில் முனைவில் ஈடுபடுத்துவதற்கான செயல்திட்டங்கள் குறித்து அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, கிராமப்புற மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள பெண்களை வெறும் நலத்திட்டப் பயனாளிகளாக அணுகாமல், திறன் பெற்ற உற்பத்தியாளர்கள், சுயதொழில் முனைவோர் மற்றும் சிறு தொழில் முனைவோர்களாக மாற்றுவதே ‘தவப்புதல்வி’ திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

பெண்களின் உள்ளூர் வளங்கள், பாரம்பரியத் திறன்கள் மற்றும் அவர்களிடம் ஏற்கனவே உள்ள அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், உணவுப் பொருட்கள் உற்பத்தி, கடல்சார் வளங்களை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறன் பயிற்சி வழங்குவதுடன், தயாரிப்பு மேம்பாடு, தரநிலை, பொதியிடுதல், பிராண்டிங், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், சந்தை இணைப்பு மற்றும் தொழில் மேலாண்மை ஆகியவற்றிலும் தொடர் பயிற்சி வழங்கும் திட்டம் குறித்து முன்மொழிவு செய்யப்பட்டது.

மேலும், ‘பயிற்சி → உற்பத்தி → சந்தை → வருமானம் → தொழில் முனைவு’ என்ற தொடர் அணுகுமுறையின் மூலம் பெண்களின் திறனை நிலையான வருமானமாக மாற்றி, அவர்களை குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சக்தியாகவும், சமூகத்தின் வளர்ச்சியில் பங்களிக்கும் தொழில் முனைவோராகவும் உருவாக்கும் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது.

“பெண்களுக்கு உதவி வழங்குவது மட்டுமல்ல; அவர்களின் திறமையை அடையாளம் கண்டு, அதை தொழில் திறனாக வளர்த்து, நிலையான வருமானத்தையும் பொருளாதார சுயநிறைவையும் உருவாக்குவதே உண்மையான மகளிர் மேம்பாடு” என்ற அடிப்படையில் ‘தவப்புதல்வி’ திட்டம் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியமும் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, கிராமப்புற பெண்களுக்கான திறன் மேம்பாடு, தொழில் பயிற்சி, தொழில் முனைவோர் உருவாக்கம், நிதி மற்றும் அரசு திட்டங்களுடன் இணைப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான திட்ட வடிவமைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தத் திட்டம் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள கிராமப்புற பெண்களுக்கு தன்னம்பிக்கை, திறன் மற்றும் வருமான வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அவர்களை ‘வேலை தேடுபவர்களாக’ அல்லாமல் ‘வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக’ மாற்றுவதே ‘தவப்புதல்வி’ அமைப்பின் தொலைநோக்கு நோக்கமாகும் என நிறுவனர் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது உடனிருந்த குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திருமதி தாரகை கத்பர்ட், ‘தவப்புதல்வி’ அமைப்பு முன்வைத்துள்ள இத்திட்டம் கடலோர மற்றும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் திறன்களை தொழில் வாய்ப்புகளாக மாற்றுவதற்கும், பொருளாதார சுயநிறைவை ஏற்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

கிராமப்புற மற்றும் கடலோரப் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி, அவர்களை திறன் பெற்ற தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில் ‘தவப்புதல்வி’ முன்வைத்துள்ள ஒருங்கிணைந்த பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அரசின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு" இந்தச் சந்திப்பின் மூலம் வலுப்பெற்றுள்ளது.