பொறியியல் சேர்க்கை பொதுப் பிரிவு முதல் சுற்று கலந்தாய்வில் 20,160 இடங்கள் தற்காலிக ஒதுக்கீடு!
Provisional allocation of 20,160 seats in engineering admission general section first round consultation!
பொறியியல் படிப்பில் சேருவதற்கு பொதுப் பிரிவு மாணவர்களுக்கு முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் தற்காலிகமாக 20,160 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ,பிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரையில் விண்ணப்பம் பெறப்பட்டது. மேலும் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 9 ஆம் தேதி வரையில் வாய்ப்பு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு இடங்களை ஒதுக்கீடு செய்து www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.பொறியியல் கலந்தாய்வில் சிறப்பு ஒதுக்கிட்டு இடங்களில் 685 இடங்கள் நிறைவடைந்தது. இந்த கலந்தாய்வில் விளையாட்டு பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் http://www.tneaonline.org என்ற இணைய தளம் வழியாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட பொது கலந்தாய்வில் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த இடங்களை ஆகஸ்ட்1 ஆம் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு உத்தரவு ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் அல்லது பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் தங்களுக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர விரும்புகிறேன் என்பதை தெரிவிக்க வேண்டும்.தற்பொழுது கிடைத்துள்ள கல்லூரியை விட மேலே தான் பதிவு செய்த கல்லூரி கிடைத்தால் மாற விரும்புகிறேன் என கூறிய மாணவர்களுக்கு 9ஆம் தேதி கல்லூரி ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும்.முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை ஒதுக்கீடு செய்த விபரங்களை http://www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை ஆகஸ்ட் 1ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.