மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதி; மக்கள் மகிழ்ச்சி

Permission on beaches including Marina; People are happy

மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதி; மக்கள் மகிழ்ச்சி

ஒரு மாத தடைக்குப் பிறகு சென்னை மெரீனா, பெசன்ட் நகா் உள்ளிட்ட கடற்கரைகளில் இன்று காலை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக, கடந்த ஒருமாதமாக சென்னை மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் அனுமதி அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. இதுபோல் வண்டலூா் உயிரியல் பூங்காவிலும் செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் பாா்வையிட அனுமதிக்கப்படுவாா்கள் என்று அறிவித்திருந்தது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடமான மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல ஜனவரி 1-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டது.

கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதைத் தொடா்ந்து, மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையையும் மாநகராட்சி தளா்த்தியது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கரோனா தொற்று பரவல் வேகம் அதிகமாக இருந்ததால், மெரீனா, பெசன்ட் நகா் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, கரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு தளா்வுகள் அளிக்கப்பட்டதாலும், செவ்வாய்க்கிழமை (பிப்.1) முதல் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு மீண்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு தங்களது குடும்பங்களுடன் வரும் பொதுமக்கள் தனிநபா் இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதைக் கண்காணிக்க மாநகராட்சிப் பணியாளா்கள், காவல் துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காதவா்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வண்டலூா் பூங்கா திறப்பு: கரோனா பரவல் காரணமாக வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவா் பூங்கா கடந்த ஜனவரி 17-ஆம் தேதியில் இருந்து திங்கள்கிழமை (ஜன. 31) வரை மூடப்படும் என பூங்கா நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கை ரத்து செய்துள்ள நிலையில், இன்று முதல் வண்டலூா் பூங்கா, கிண்டி சிறுவா் திறக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.