நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 'பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்'
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களைக் கவர்வதற்கு கொடுக்கப்படும் பரிசுப் பொருள்களும் பண விநியோகமும் அதிர்ச்சியூட்டக் கூடிய வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அதிமுகவும் திமுகவும் ஒன்றையொன்று குற்றச்சாட்டுகின்றன.
அரசியல் கட்சிகள் தங்கக் காசு, வெள்ளி கொலுசு, பணம் ஆகியவற்றைக் கொடுக்கும்போது மட்டும் பறக்கும் படைகள் ஒளிந்து கொள்கின்றன. சில இடங்களில் ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையில் விலை பேசுகின்றனர்' என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றும் நோக்கில் ஆளும் தி.மு.கவின் பிரசார முறைகள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக பரிசுப் பொருள்களை வாரியிறைக்கும் பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அ.தி.மு.கவும் பல இடங்களில் பணத்தை வாரியிறைப்பதாகவும் புகார்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளிக் கொலுசு, ஹாட்பாக்ஸ்
அதிலும், கோவை, சேலம், வேலூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலங்களில் தி.மு.கவுக்கு பெரிதாக வெற்றி கிடைக்காததால் அங்குள்ள மாநகராட்சிகளைக் கைப்பற்றும் நோக்கில் தி.மு.க தீவிரம் காட்டி வருவதாகவும் சொல்கின்றனர்.
இதில், கோவை மாவட்டத்துக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக இருக்கிறார். இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு கிராம் தங்கக் காசு, வெள்ளி கொலுசு, ஹாட்பாக்ஸ், ரூ.2000 பணம் என தி.மு.க விநியோகிப்பதாக அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது. ஒருகட்டத்தில், `அது வெள்ளி கொலுசு அல்ல. வெறும் கொலுசு. போலியானது, மக்கள் நம்ப வேண்டாம்' எனவும் அ.தி.மு.கவினர் கூறி வருகின்றனர்.
கோவையில் கரூர் தி.மு.க ஆதிக்கமா?
மேலும், பரிசுப் பொருள், பண விநியோகத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.கவினரே முன்னிலை வகிப்பதாகவும் அவர்கள் கோவை நகரை விட்டு வெளியே வேண்டும் எனவும் கோவை தெற்குத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட பரிசுப் பொருள்கள்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், `` தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக கரூர் தி.மு.கவினர் பணவிநியோகம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோவை மாநகராட்சியை வெல்வதை மானப் பிரச்னையாக தி.மு.க கருதுகிறது. ஆளும்கட்சி பண விநியோகம் செய்வதற்கு காவல்துறையும் உறுதுணையாக உள்ளது'' என்றார்.
அதேநேரம், அ.தி.மு.க தரப்பிலும் வாக்குக்கு ஆயிரம் ரூபாயும் தேர்தலுக்குப் பிறகு தங்கக் காசு பெற்றுக் கொள்ளும் வகையில் டோக்கன் விநியோகிப்பதாகவும் தி.மு.க தரப்பில் புகார் சொல்லப்படுகிறது.
எடப்பாடியின் நண்பர் வீட்டில் சோதனை
இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, வெள்ளி கொலுசு, மளிகைப் பொருள்களை வாங்கி தனது வீட்டில் எடப்பாடியின் நண்பரான `கூட்டுறவு' இளங்கோவன் பதுக்கி வைத்துள்ளதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் ஆத்தூர் டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார், இளங்கோவனின் பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் எதுவும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேபோல், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் நேரடியாக மோதும் வார்டுகளில் 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரையில் பணவிநியோகம் நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இவை போக, மின் அடுப்பு, பட்டு வேட்டி, புடவை, செல்போன், வெள்ளி கொலுசு ஆகியவற்றில் ஒன்று பரிசாக வழங்கப்படுவதாகவும் தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் சென்றுள்ளது.
பகலிலேயே பண விநியோகம்
கோவை மாவட்டத்தில் நடக்கும் பணவிநியோகம் தொடர்பாக பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், `` தங்களுடைய நலனுக்காக அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தையே அழித்து வருகின்றன. வாக்காளர்களுக்கு கொலுசு, 2,000 ரூபாய் பணம் என இவ்வளவு கொடுமையான தேர்தலை இதுவரையில் பார்த்தது இல்லை. அரசாங்கத்தின் துணையோடும் காவல்துறையின் துணையோடும் இதனை ஆளும்கட்சி அரங்கேற்றி வருகிறது'' என்கிறார்.
`` தெருவில் வருவோர், போவோரிடம் எல்லாம் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும்போது மட்டும் பறக்கும் படைகள் ஒளிந்து கொள்கின்றன. வீட்டுக்கு வீடு பணம் கொடுப்பது எல்லாம் தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரியாதா? சில இடங்களில் ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையில் விலை பேசுகின்றனர். ஒரு கிராம் தங்கக் காசு, வெள்ளிக் கொலுசு கொடுக்கின்றனர். அனைத்துப் பகுதிகளிலும் விநியோகம் நடக்கிறது'' எனக் குறிப்பிடும் ஈஸ்வரன்,
ஆளும்கட்சி அதிகளவில் பணம் கொடுக்கிறது. அ.தி.மு.கவும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப பணம் கொடுக்கிறது. முன்பெல்லாம் இரவு நேரத்தில் பயந்தபடி பணம் கொடுப்பார்கள். இந்தத் தேர்தலில் வெளிப்படையாகவே பகலில் பணம் கொடுக்கிறார்கள். இதற்கு எதிராக கடந்த 16 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினோம். எங்களைக் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்திவிட்டனர். நேர்மையான தேர்தலை வலியுறுத்தி நாங்கள் நடத்தும் விழிப்புணர்வு பிரசாரத்துக்குக்கூட அனுமதி கிடைக்கவில்லை. உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு தற்போது பிரசாரம் செய்து வருகிறோம்'' என்கிறார்.
ஹாட்பாக்ஸில் பணம்
`` வாக்காளர்களுக்கு ஹாட்பாக்ஸ் கொடுக்கின்றனர். அதில் 300 ரூபாய் பணம் வைத்துக் கொடுப்பதாகவும் தகவல் வந்துள்ளது. அந்த ஹாட்பாக்ஸில் 2 இட்லிகளுக்கு மேல் வைக்க முடியாது. வெள்ளி கொலுசு என்ற பெயரில் கவரிங் நகைகயைக் கொடுக்கின்றனர். அதனை விற்றால் பத்து ரூபாய்கூட தேறாது. கோவை மக்களை கேவலமானவர்களாக தி.மு.க சித்தரிக்கிறது. தவிர, இரண்டாயிரம், மூன்றாயிரம் ரூபாய் எனப் பணமும் சற்று பலவீனமாக உள்ள வார்டுகளில் அதற்கும் மேலாகவும் தி.மு.க பணம் கொடுக்கிறது'' என்கிறார், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரான கோவை மகேஸ்வரி.
``அ.தி.மு.கவும் பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே?'' என்றோம். `` பணம் கொடுத்து வாக்குகளைப் பெற வேண்டிய நிலையில் அ.தி.மு.க இல்லை. அ.தி.மு.க அரசின் திட்டங்களே போதும். தி.மு.கவினர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தோம். சில இடங்களில் கையும் களவுமாக பிடித்தும் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும்கட்சியின் ஏவல் துறையாக காவல்துறை மாறிவிட்டது'' என்கிறார்.
மேலும், ``கோவை மாவட்டத்தை அ.தி.மு.கவின் கோட்டையாக எஸ்.பி.வேலுமணி மாற்றிவிட்டார். அதனைத் தகர்க்கும் முயற்சிகளில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. அவர்களின் கணக்குகள் பலிக்கப் போவதில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பில் பப்பாளி விதைகளை எல்லாம் மிளகு எனச் சொல்லிக் கொடுத்தனர். வியாபாரிகள் கலப்படம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். பரிசுத் தொகுப்பில் கலப்படம் செய்த அரசுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுப்பார்கள்'' என்கிறார்.
புகார்களில் உண்மையில்லை
மேற்கு மண்டலங்களில் தி.மு.கவினர் பணம், பரிசுப் பொருள் விநியோகிப்பதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த தி.மு.கவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, `` பணம் கொடுப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. கடந்த எட்டு மாதகாலமாக மக்கள் நலனை முன்னிறுத்தி ஆட்சி நடந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளும்கட்சிக்கு மக்கள் இயல்பாகவே வாக்களிப்பார்கள். கோவையில் அ.தி.மு.கவினர் பணம் கொடுக்க முயற்சித்த சம்பவம், புகாராக பதிவாகியுள்ளது. வேளச்சேரியிலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை மறைக்கும் வகையில் தொடர்ந்து அ.தி.மு.கவினர் எங்கள் மீது புகார்களைக் கூறி வருகின்றனர்'' என்கிறார்.
``கோவையில் இருந்து கரூர் தி.மு.கவினர் வெளியேற வேண்டும் பா.ஜ.க கூறுகிறதே?'' என்றோம். `` அமைச்சர் செந்தில் பாலாஜியும் கரூரை சேர்ந்தவர்தான். அவரை வெளியேற்ற வேண்டும் எனச் சொல்வார்களா? அவரது உதவியாளர்கள்தான் அங்கு உள்ளனர். ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து சிலர் தேர்தல் வேலை பார்ப்பது வழக்கம்'' என்கிறார்.
மேற்கு மண்டலத்தில் கூடுதல் கவனம் ஏன்?
``கோவை, சேலம் ஆகிய மாநகராட்சிகளில் வெல்வதை தி.மு.க கௌரவப் பிரச்னையாகப் பார்ப்பதால்தான் அதீத பணம் விளையாடுவதாகச் சொல்கிறார்களே?'' என்றோம். `` அந்த மாவட்டங்களில் நாங்கள் உறுதியாக வெல்ல வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. அம்மாவட்டங்களில் கடந்த காலத்தில் நடந்த தேர்தலில் சாதியா.. மதமா என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. அதனால்தான் எங்களுக்குக் குறைவான வாக்குகள் வந்தன. இந்தமுறை அதனை முறியடிக்க வேண்டும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்'' என்கிறார்.
மேலும், `` ஆளும்கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகச் சொல்வது தவறானது. புகார்கள் கொடுக்கப்பட்டால் தேர்தல் ஆணையம் உறுதியாக நடவடிக்கை எடுக்கும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. ஓர் அரசியல் கட்சியாக நாங்களும் புகார் கொடுத்துள்ளோம். அதன்பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' என்கிறார்.