கன்னியாகுமரியில் 'வீ த சேஞ்ச்' இயக்கம் தொடக்கம்

கன்னியாகுமரியில்  'வீ த சேஞ்ச்'  இயக்கம் தொடக்கம்

இளைஞர்கள் மற்றும் சமூகத்தினரிடையே மாற்றத்தை உருவாக்குவதற்கான புதிய முயற்சி

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 14, 2026: தனிநபர்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதில் தங்களது பங்களிப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘வீ த சேன்ச்’ (நாமே மாற்றம்) என்ற புதிய சமூக மாற்றத்திற்கான இயக்கம் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது.

முளகுமூடு பகுதியில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற நிகழ்வில் இந்த இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. சமூகத்தில் நிலவும் சவால்களை அடையாளம் காணுதல், அவற்றிற்கு நடைமுறை தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் சமூக முன்னேற்றத்தில் தனிநபர்களின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகியவை இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கங்களாக எடுத்துரைக்கப்பட்டன.

இயக்கத்தை அறிமுகப்படுத்திய அதன் நிறுவனர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பிறரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைவிட, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வகையில் மாற்றத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“மாற்றத்திற்காக நாம் காத்திருக்க வேண்டாம்; நாமே மாற்றமாக மாறுவோம்” என்ற கருத்தை முன்வைத்த அவர், இளைஞர்கள் மற்றும் பெண்கள் சமூக மாற்றத்தின் முக்கிய சக்திகளாக உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

சமூகப் பிரச்சினைகளை வெறுமனே அடையாளம் காண்பதுடன் நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கி செயல்படுத்தும் மனப்பான்மையை இவ்வியக்கம் வளர்க்கும் என அவர் தெரிவித்தார். சமூகப் பொறுப்பு, தனிநபர் பங்களிப்பு, பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம், சமூக ஈடுபாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இவ்வியக்கம் செயல்பட உள்ளது.

நிகழ்வில் வழக்கறிஞர் எமிலின் பெலின்டா உரையாற்றியதுடன், இளைஞர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதன் அவசியத்தையும், சமூக முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

சிற்பி அறக்கட்டளையின் நிறுவனர் ஜெயா ஸ்ரீதரன் உரையாற்றி, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முக்கியத்துவம், சமூகப் பங்கேற்பு மற்றும் இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு குறித்து வலியுறுத்தினார்.

பிறரிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் தங்களிடமிருந்து மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை முன்னிறுத்தி இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கும் இந்த மாற்றப் பயணம், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தினரை ஒன்றிணைத்து, பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் கொண்ட புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கத்துடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் புதிய பாரதம் படைக்க ஒரு உபகரணமாக செயல் படும் என அதன் நிறுவனர் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை இந்த இயக்கத்தை முன்னெடுப்பாதக தெரிவித்தார்.