ஒரே வீடியோ கால்.. அனைத்து ஊழியர்களும் பணிநீக்கம்.. இந்திய ஐடி துறையில் என்ன தான் நடக்கிறது

ஒரே வீடியோ கால்.. அனைத்து ஊழியர்களும் பணிநீக்கம்.. இந்திய ஐடி துறையில் என்ன தான் நடக்கிறது
இந்திய ஐடி துறையில் என்ன தான் நடக்கிறது?..

அண்மைக்காலமாக ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. சில நிறுவனங்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது பல்வேறு சிக்கல்களை எழுப்புகிறது.

அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் வீடியோ கால் வழியாக ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த ஒரு ஐடி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் தன்னுடைய ரெடிட் தளத்தில் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்

வழக்கம்போல நாங்கள் எங்களுடைய வேலை நாளை தொடங்கினோம் திடீரென எங்கள் தலைமை செயலதிகாரி ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் இருக்கிறது என கூறினார். அனைவரும் வீடியோ கால் வாயிலாக அந்த கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது திடீரென அவர் நிறுவனத்திடம் போதிய நிதி இல்லை எனவே உங்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்காது நாளையிலிருந்து யாரும் வேலைக்கு வர வேண்டாம் என கூறினார் . திடீரென முதலீட்டாளர்கள் அனைவரும் தாங்கள் செய்த முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொண்டனர் அதுவே நிறுவனத்தை மூடுவதற்கு காரணம் எனவும் தெரிவித்தார் என பதிவு செய்துள்ளார்.

உங்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தர முயற்சி செய்கிறேன் ஆனால் எத்தனை பேருக்கு நான் வேலை வாங்கி தர முடியும் என உறுதியாக கூற முடியாது என தலைமை செயல் அதிகாரி கூறினாராம். இப்படி ஒரு அதிர்ச்சியை நீங்கள் இதற்கு முன்பு எதிர்கொண்டு இருக்கிறீர்களா இதை எப்படி சமாளித்தீர்கள் என அந்த ஊழியர் கேள்வி எழுப்பி இருக்கிறார்

அவருடைய இந்த பதிவுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த நவம்பர் மாதம் இதே போன்ற ஒரு சூழலை நான் எதிர் கொண்டேன் , இதே காரணத்தை கூறி தான் எங்கள் தலைமை செயல் அதிகாரி அனைவரையும் வேலையில் இருந்து நீக்கினார். இந்த வேலை நீக்கம் என்ற அறிவிப்பில் இருந்து நான் வெளியே வருவதற்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. அதன் பின்னர் நான் வேலை தேடி இப்போது வேறு வேலையில் இருக்கிறேன். நம்பிக்கை இழக்க வேண்டாம் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என ஒருவர் கூறியிருக்கிறார் .

ஒரு பயனர் கடந்த மாதம் இதே போன்ற ஒரு சூழலை நான் எதிர் கொண்டேன் முயற்சி செய்யுங்கள் என கூறியிருக்கிறார் இதுவும் கடந்து போகும் அனைத்து இடங்களிலும் வாய்ப்புகள் இருக்கின்றன நம்பிக்கை இழக்காதீர்கள் என தெரிவித்துள்ளார். ஒரு பயனர் இது நிச்சயம் ஒரு கடினமான ஒரு காலம் தான் ஆனால் அதனை எதிர்த்து போராடுங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என தெரிவித்திருக்கிறார்