இன்ஸ்டாகிராம் காதல்: கல்லூரி மாணவியிடம் 25 பவுன் நகை பெற்று மோசடி - காதலன் சிக்கினார்

இன்ஸ்டாகிராம் காதல்: கல்லூரி மாணவியிடம் 25 பவுன் நகை பெற்று மோசடி - காதலன் சிக்கினார்
கர்நாடகாவில் இருந்து காதலனை வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை கல்லூரி மாணவி கொடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகசெந்தில், விசைத்தறிகூட அதிபர். இவரது மகள் நாக அட்சயா (19 வயது). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நாக அட்சயாவுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் (22 வயது) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் நாக அட்சயாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதற்கு நாக அட்சயா சம்மதம் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து லிவின், நீ இங்கு வந்தால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம். தனியாக வசிக்க வீடு பார்ப்பதற்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். இதை நம்பிய நாக அட்சயா, காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையத்துக்கு வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.

அதை பெற்றுக்கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை. எனவே மேலும் ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என நாக அட்சயாவிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் லிவினிடம் மீண்டும் ராஜபாளையம் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் லிவினின் வருகைக்காக காத்திருந்த போலீசார் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் நாக அட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.