சீன சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் விசா - மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி,
2020-இல் இமயமலை பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் உச்சத்தை அடைந்தது. இதையடுத்து, இந்தியா சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தது, நூற்றுக்கணக்கான சீன ஆப்களை தடை செய்தது மற்றும் பயணிகள் விமான பாதைகளை மூடியது. 2020-இல் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அனைத்து சுற்றுலா விசாக்களையும் இந்தியா நிறுத்தியது. 2022 ஏப்ரலில், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA), சீன குடிமக்களுக்கான அனைத்து சுற்றுலா விசாக்களும் செல்லாது என்று அறிவித்தது.

இந்தநிலையில், இந்த ஆண்டு ஜனவரியில், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி சீனாவிற்கு பயணம் செய்தபோது, பீஜிங்-புதுடெல்லி இடையே நேரடி வணிக விமானங்களை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. மேலும், இந்திய யாத்ரீகர்களுக்கு மேற்கு திபெத்தில் உள்ள கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரி யாத்திரையை மீண்டும் தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (ஜூலை 24) முதல் மீண்டும் சீன சுற்றுலாப்பயணிகளுக்கு விசா வழங்க உள்ளது மத்திய அரசு . இந்திய அரசாங்கம் நாளை முதல் சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ராஜதந்திர ஈடுபாடுகளின் ஒரு பகுதியாக ஜின்பிங்கை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Yasmin fathima

