அபுதாபி டு கோவை கடத்தி வரப்பட்ட டிரோன்கள்.. ஐ போன்கள்.. சுங்கத்துறையினரை அதிரவைத்த 5 பேர்

அபுதாபி டு கோவை கடத்தி வரப்பட்ட டிரோன்கள்.. ஐ போன்கள்.. சுங்கத்துறையினரை அதிரவைத்த 5 பேர்
கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்

கோவை: கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் அதிகரித்து வருகிறார்கள். இந்நிலையில் அபுதாபியில் இருந்து கோவை வந்த 5 பயணிகளிடம் இருந்து டிரோன்கள், ஐ போன்கள், மைக்ரோபோன்கள், இ - சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்ட

தமிழத்தில் சென்னை விமான நிலையத்துக்கு பிறகு பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் இருக்கிறது. சர்வதேச விமான நிலையமாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் சராசரியாக 12,000 பயணிகள் கோவை விமான நிலையத்தில் பயணிக்கிறார்கள். கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட உள்நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் அவ்வபோது போதை பொருட்கள், தங்கம், மின்னணு சாதனங்கள், சட்ட விரோத பொருட்கள் கடத்தி வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) அபுதாபியில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது.

பொதுவாக பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதன்படி அபுதாபி விமானத்தில் கோவை வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 5 பயணிகளின் பைகளை சோதனை செய்த போது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்

அந்தப் பயணிகள் கொண்டு வந்த பைகளில் அதி நவீன டிரோன்கள், ஐ போன் உள்ளிட்ட விலை உயர்ந்த செல்போன்கள், இ-சிகரெட்டுகள், பேட்டரிகள், ஸ்மார்ட் வாட்ச்கள், மைக்ரோபோன்கள் கண்டறியப்பட்டன. அந்தப் பொருள்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர்கள் சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி, முகமது அபூபக்கர் சாதிக், கன்னியாகுமரியைச் சேர்ந்த பெனிஷ் ஜேசுதாசன், கடலூரைச் சேர்ந்த முத்துராஜா மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த கமல்பாட்சா என்பது தெரியவந்தது. அவர்கள் அபுதாபியில் இருந்து மேற்கண்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது..

பறிமுதல் செய்யப்பட்ட டிரோன்களின் மதிப்பு ரூ.15 லட்சமாகும். சிகரெட், இ - சிகரெட்களின் மதிப்பு ரூ.16 லட்சமாகும். இதேபோல ஐ - போன், மைக்ரோபோன் உள்ளிட்ட இதரப் பொருட்களின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். மொத்தமாக அந்தப் பொருட்களின் மதிப்பு ரூ.90 லட்சமாகும். அந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.