பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஒமிக்ரான்? விஞ்ஞானிகளின் கணிப்பும், விளக்கமும்!

பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஒமிக்ரான்? விஞ்ஞானிகளின் கணிப்பும், விளக்கமும்!

பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஒமிக்ரான்? விஞ்ஞானிகளின் கணிப்பும், விளக்கமும்!

மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது கொரோனா பாதிப்பு. ஒமிக்ரானின் அதிவேக பரவல் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளானாலும் நோய் தீவிரமான நிலையோ, மருத்துவமனை அனுமதியோ அதிகரிக்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இம்யூனாலஜிஸ்ட் மோனிகா காந்தி, ``கோவிட் வைரஸ் இனி நம்முடன்தான் இருக்கப் போகிறது, ஆனால் ஒமிக்ரான் திரிபானது நம்மிடையே நோய்த்தடுப்பாற்றலை அதிகரித்து, தொற்றுநோயை பெருமளவில் தணிக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கோவிட் தொற்றானது, மூக்கில் தொடங்கி, தொண்டை வழியே பரவும். குறைந்த பாதிப்புள்ள வைரஸ் தொற்றானது மேல் சுவாசப்பாதையைத் தாண்டி பரவாது.

ஒருவேளை அது நுரையீரல்வரை சென்றால் மட்டுமே தீவிர பாதிப்புகள் ஆரம்பமாகும். ஒமிக்ரான் தொற்றானது, முந்தைய திரிபுகளைப் போல நுரையீரலை பாதிப்பதில்லை என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன.

``ஒமிக்ரானின் அதிவேகப் பரவல் தன்மை காரணமாக, பாதிப்பாளர்களின் எண்ணிக்கை உச்சம் தொடலாம். ஆனாலும் அதன் அதிவேகப் பரவல் தன்மை மற்றும் மிதமான பாதிப்பு என இரண்டு விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, இது பெருந்தொற்றின் முடிவுக்கான ஆரம்பமாகவே தெரிகிறது'' என்கிறார் மோனிகா காந்தி. ஹாங்காங்கில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட மற்றோர் ஆய்வையும் இதற்கு மேற்கோள் காட்டுகிறார் மோனிகா.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் ஒமிக்ரான் தொற்றுக்கு உள்ளானவர்கள், பிற வைரஸ் தொற்று பாதிப்புகளுக்கு எதிராகவும் பலமான நோய் எதிர்ப்பாற்றலைப் பெற்றதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதனால்தான் இந்த வைரஸ் மாறுபாடானது, பெரும்பாலான மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் என தான் நம்புவதாகவும் சொல்கிறார்.

மோனிகாவின் இந்தக் கருத்து குறித்து, சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூரிடம் பேசினோம்.

``டெல்டா வைரஸைவிட, ஒமிக்ரானின் பரவும் வேகம் மிக அதிகம். அதே நேரம் டெல்டாவைவிட ஆபத்து குறைந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒமிக்ரானின் வருகையால் உலகம் முழுக்க டெல்டா காணாமல் போனால் நல்லதுதான். ஆனால் அதற்காக இது பெருந்தொற்றுக்கே முற்றுப்புள்ளியாக அமையும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. கோவிட் வைரஸானது அவ்வளவு சீக்கிரத்தில் நம்மைவிட்டுப் போகாது. அது உலகின் ஏதோ மூலையில் எங்கு வேண்டுமானாலும் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கலாம். இனி வரும் நாள்களில் அதிக தீவிரத்தன்மையற்ற வைரஸ் திரிபுகளை நாம் பார்க்கக்கூடும்.

அது நல்லதோர் அறிகுறி. இதுவரை எதிர்கொண்ட மோசமான சூழல் தொடராமல், நிலைமை ஓரளவு மேம்படலாமே தவிர, கொரோனா இல்லாத உலகம் சாத்தியமில்லை என்பது என் கருத்து'' என்கிறார்.