ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகம் என்பது எந்தவொரு குறிப்பிட்ட பயிற்சியும் அல்ல. அது குறிப்பிட்ட ஒரு விதத்தில் நாம் இருக்கும் தன்மை. அந்த இடத்திற்கு செல்ல, பல விஷயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இது உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு தோட்டத்தைப் போன்றது. மண், சூரிய வெளிச்சம் அல்லது செடியின் தண்டு ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருந்தால், அது பூக்களைக் கொடுக்காமல் இருக்கலாம். அப்போது நீங்கள் வேறு ஏதாவது செய்ய வேண்டியிருக்கும். இந்த மாதிரி விஷயங்களை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
நீங்கள், உங்களது உடல், மனம், உணர்வுகள் மற்றும் சக்தி நிலைகளை ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சிநிலைக்கு எடுத்து சென்றால், ஏதோவொன்று உங்களுக்குள் மலரும் - இதுதான் ஆன்மீகம். உங்களது காரண அறிவு முதிர்ச்சியடையாமல் இருந்தால், அது எல்லாவற்றையும் சந்தேகத்துடன் அணுகும். மாறாக உங்கள் காரண அறிவு முதிர்ச்சி அடைந்திருந்தால், அது எல்லாவற்றையும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் பார்க்கும்.

எப்போதெல்லாம் ஒரு மனிதன், தன்னைவிட பெரிதான ஒன்றை தன்னுடைய அனுபவத்தில் உணர்கிறானோ, பாரம்பரிய வழியில் அதை நாம் பார்த்தால், “அதுதான் கடவுள்”. கடவுள் என்றாலே இதுதான் - நம்மைவிட பெரிதான எல்லாமே. அது ஒரு மனிதனாக இருக்கலாம், ஒரு அனுபவமாக இருக்கலாம் அல்லது இயற்கையின் ஒரு அம்சமாக இருக்கலாம். ஆனால், இது ஆன்மீகமா? இல்லை, இது வெறும் ஓர் உயிர். “வெறும் ஒரு உயிர்” என்று நான் சொல்வதை, சாதாரணமான ஒரு சிறு விஷயமாக ஒதுக்கிவிட முடியாது. இதுதான் மிகப் பெரிய விஷயம். வாழ்க்கை என்பது மிகவும் சக்திவாய்ந்ததாகவும், மூழ்கடிப்பதாகவும், பேரானந்த அனுபவமாகவும் இருந்தால், இதனை யார் உருவாக்கியிருப்பார்கள் என்று உங்களுக்கு தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கும்.
இந்த படைப்பின் மூலத்தையோ அல்லது படைத்தல் செயல்முறையையோ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால், உங்களது உடல்தான் உங்களுக்கு படைப்பின் மிக நெருங்கிய அங்கமாக உள்ளது, அல்லவா? படைப்பின் மூலம், உங்களுக்குள் சிக்கியிருக்கிறது. இதை நீங்கள் தவறவிடக்கூடாது. இதனை தவறவிடாமல், உங்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலத்தை அறிந்துகொண்டால், நீங்கள் ஆன்மீகத்தில் இருக்கிறீர்கள்.
சத்குரு உரை



