சென்னையில் 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவை: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவை: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் ரூ.233 கோடி மதிப்பில், 55 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள், 80 தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் அதிகாரிகள்.

பெரும்​பாக்​கம்: சென்னை அருகே பெரும்​பாக்​கத்​தில் புதி​தாக 135 மின்​சார ஏசி பேருந்​துகள் சேவையை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். தமிழகத்​தில் முதன்​முறை​யாக சென்னை மாநகர போக்​கு​வரத்து கழகம் சார்​பில் ரூ.208 கோடி மதிப்​பில் 120 புதிய தாழ்தள மின்​சார பேருந்​துகளின் சேவையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்​தார்.

இந்​நிலை​யில் செங்​கல்​பட்டு மாவட்​டம் பெரும்​பாக்​கம் பணிமனை​யில் இருந்து ரூ.233 கோடி மதிப்​பீட்​டில் 55 மின்​சார ஏ.சி. பேருந்​துகள் மற்​றும் 80 புதிய தாழ்தள மின்​சார பேருந்​துகள் என மொத்​தம் 135 மின்​சார பேருந்​துகளின் சேவை​கள், மாநகர் போக்​கு​வரத்​துக் கழகத்​தின் ரூ.49.56 கோடி மதிப்​பீட்​டில் மேம்​படுத்​தப்​பட்ட பெரும்​பாக்​கம் மின்​சா​ரப் பேருந்து பணிமனை ஆகிய​வற்​றின் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது.

போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் தலை​மை​யில் நடை​பெற்ற இந்த நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பங்​கேற்று பேருந்து சேவையை தொடங்கி வைத்​தார். பின்​னர் பேருந்​தில் பயணம் மேற்​கொண்​டார்.

சென்னை பெருநகர கூட்​டாண்மை திட்​டத்​தின் கீழ், நிலை​யான நகர்ப்​புற சேவை​கள் திட்​டத்​தின் அடிப்​படை​யில் உலக வங்கி மற்றும் ஆசிய உள்​கட்​டமைப்பு முதலீட்டு வங்​கி​யின் பங்​களிப்​புடன் டீசலில் இயங்​கும் பேருந்​துகளுக்கு மாற்​றாக, சுற்​றுச்​சூழலுக்கு பாதிப்​பிலாத இயற்கை எரி​வாயு மற்​றும் மின்​சா​ரப் பேருந்​துகளை இயக்​கும் நடவடிக்​கையை தமிழக அரசு மேற்​கொண்டு வருகிறது.

இந்​நிகழ்ச்​சி​யில், எம்​எல்​ஏக்​கள் எஸ்​.அர​விந்த் ரமேஷ், ஏ.எம்​.​வி.பிர​பாகர் ராஜா, போக்​கு​வரத்​துத் துறை அரசு முதன்​மைச் செய​லா​ளர் சுன்​சோங்​கம் ஜடக் சிரு, மாநகர் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் த.பிரபு சங்​கர், செங்கை ஆட்​சி​யர் தி.சினே​கா மற்​றும் உயர் அலு​வலர்​கள் கலந்து கொண்​டனர்.

அதன்​படி பெரும்​பாக்​கத்​தில் மின்​சார பேருந்​துகளை பராமரிப்​ப​தற்​காக புனரமைக்​கப்​பட்ட பணிமனை​யும், 135 தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகளும் தொடங்கி வைக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. மேலும், மகளிருக்கு பாது​காப்​பான பயணத்தை உறுதி செய்​யும் வகை​யில், தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகளில், கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. புதிய தாழ்தள மின்சார குளிர்​சாதனப் பேருந்​துகளில் விருப்​பம் போல் பயணம் செய்ய மாதாந்​திர பயணச் சீட்டு ரூ.2,000 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்​ன​தாக துணை முதல்​வர் பெரும்​பாக்​கத்​தில் இயங்கி வரும் அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​யில் மாநிலங்​களவை உறுப்​பினர் வழக்​கறிஞர் வில்​சன் தொகுதி மேம்​பாட்டு நிதி ரூ.2 கோடி மற்​றும் சி.எம்​.டி.ஏ நிதி ரூ.1 கோடி என மொத்​தம் ரூ.3 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்​டுள்ள கலைஞர் கலை​யரங்​கத்​தை திறந்​து வைத்​தார்