நியூயார்க் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 31 மணி நேரம் அவதி!
வாஷிங்டன்: மாட்ரிட்டில் இருந்து நியூயார்க் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில், நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், 282 பயணிகள் 31 மணி நேரம் கடும் அவதி அடைந்தனர்.
கடந்த ஜூலை 6ம் தேதி மாட்ரிட்டில் இருந்து நியூயார்க்கிற்கு டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் 282 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் புறப்பட்டது. நடுவானில் விமானத்தில், தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள போர்த்துகீசிய தீவுகளின் உள்ள லாஜஸ் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது. விமானம் லாஜஸில் பாதுகாப்பாக தரையிறங்கியது, அங்கு அனைத்து பயணிகளும் பணியாளர்களும் விமானத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்

அவர்கள் அனைவரும் ஹோட்டல்களில் இரவு தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுநாள் விமான நிறுவனம் ஒரு மாற்று விமானத்தை அனுப்பியது. பயணிகள் திங்கள்கிழமை மாலை மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். மாற்று விமானம் ஜூலை 7ம் தேதி இந்திய நேரப்படி இரவு 9 மணிக்குப் பிறகு புறப்பட்டு, இரவு 10:36 மணியளவில் நியூயார்க்கின் ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனால் வழக்கமான நேரத்தை விட பயணிகள் 31 மணி நேரம் கடும் அவதி அடையும் சூழல் ஏற்பட்டது.
இது குறித்து டெல்டா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு விமான நிறுவனம் கூறியுள்ளது


Yasmin fathima

