மராட்டியம்: பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

மராட்டியம்: பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
மராட்டியத்தில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 27 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 2 பேர் ஆண்கள் மற்றும் 2 பேர் குழந்தைகள் ஆவர்.;

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கெத் தாலுகாவுக்கு உட்பட்ட பெய்த் பகுதியருகே குந்தேஷ்வர் கோவில் உள்ளது. ஆடி மாதத்தில், திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்வது வழக்கம்.

அதுபோல், லாரி ஒன்றில் 35-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றனர். அப்போது மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் பயணித்த 10 பெண் பக்தர்கள் பலியானார்கள். 27 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 2 பேர் ஆண்கள் மற்றும் 2 பேர் குழந்தைகள் ஆவர்.

இதுபற்றிய தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண தொகை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவித்துள்ளார்