திருப்பூரில் ரூ.295 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

திருப்பூரில் ரூ.295 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
பல்வேறு துறைகள் சார்பில் 19 ஆயிரத்து 785 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.;

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைப்பதுடன், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், ஊராட்சி துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல ஆணைகள், மகளிர் திட்டம், தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 19 ஆயிரத்து 785 பேருக்கு, ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

விழா முடிந்ததும் உடுமலையில் இருந்து கார் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை கோவைக்கு சென்று விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி உடுமலை நகரம் முழுவதும் மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உடுமலையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தார். பின்னர் கோவையில் இருந்து வேன் மூலம் பொள்ளாச்சி வழியாக திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு வந்தார்.உடுமலை மாரியம்மன் கோவில் அருகே, முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது கருப்பு, சிவப்பு நிற பலூன்களை கையில் ஏந்தியபடியும், வரவேற்பு பதாகைகளை ஏந்தியப்படியும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பெண்கள் திரளாக நின்று உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். வேனில் இருந்தபடியே முதல்-அமைச்சர் கைகளை அசைத்தும், வணக்கம் கூறியும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

முதல்-அமைச்சர் வந்த வேனில் தி.மு.க. திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர்கள் முத்துசாமி, அர.சக்கரபாணி, கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், திருப்பூர் ரோடு வழியாக சென்று தாராபுரம் சாலையில் உள்ள ஈஸ்வர சாமி எம்.பி.யின் உறவினர் வீட்டில் தங்கினார்.