கண்களை கட்டிக் கொண்டு போய்...” - எஸ்எஸ்ஐ கொலையில் கைதான தந்தை, மகன் கதறல்
உடுமலை: உடுமலையில் எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூர்த்தி மற்றும் தங்கபாண்டி ஆகிய இருவரும் வெளியே வரும்போது, “கண்களை கட்டிப் போட்டு சுட்டுக் கொல்ல நாங்கள் தான் கிடைத்தோமா? எங்கள் உயிருக்கு ஆபத்து எனில் அதற்கு போலீஸார் தான் காரணம்” என கதறியடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலையில் எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட மூர்த்தி (66), தங்கபாண்டி (28) ஆகிய இருவரையும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் ஆக.21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்களை கண்டதும், “கண்களை கட்டிக் கொண்டு போய் சுட்டுத்தள்ள நாங்கள்தான் கிடைத்தோமா?” என மூர்த்தியும், “என் அண்ணனை அநியாகமாக போலீஸார் சுட்டுக் கொன்றுவிட்டனர். காலையில் உயிருடன் காட்டினார்கள், அதற்குள் கொன்று விட்டார்கள். எங்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு போலீஸார் தான் காரணம்” என கண்ணீர் விட்டபடி கூறிச் சென்றார். இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற வழக்கில் தொடர்புடைய நபரான மணிகண்டனை போலீஸார் இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.



