இன்னும் 5 ஆண்டுகள் தான்.. 80% வேலைகளை AI ஆக்கிரமித்துவிடும்.. வினோத் கோஸ்லா எச்சரிக்கை..!!

இன்னும் 5 ஆண்டுகள் தான்.. 80% வேலைகளை AI ஆக்கிரமித்துவிடும்.. வினோத் கோஸ்லா எச்சரிக்கை..!!
மனித வாழ்க்கையும் வேலை வாய்ப்புகளும் இனி முற்றிலும் மாறப்போவதாக அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்

பிரபல முதலீட்டாளரும் தொழில்நுட்ப நிபுணருமான வினோத் கோஸ்லா, சமீபத்தில் இந்தியா - அமெரிக்க தொழில்நுட்ப உலகத்தில் பெரிய விவாதத்துக்கு வழிவகுக்கும் வகையில், மனித வாழ்க்கையும் வேலை வாய்ப்புகளும் இனி முற்றிலும் மாறப்போவதாக அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.

ஸெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் WTF Podcast-ல் அவர் கலந்து கொண்ட போது இந்த கருத்தை அவர் தெரிவித்தார். வினோத் கோஸ்லா, தற்போது சிலிக்கான் வாலியில் மிகப் பெரிய முதலீட்டாளராக இருக்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாக ஏஐ, எப்படி மனித வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.

அவர் கூறுகையில், "எதிர்காலத்தில் கல்வி முறைகள் மட்டுமல்ல, வேலை வாய்ப்புகள், திறன்கள், முதலீட்டுப் பரிமாணங்கள் அனைத்தும் ஏஐ காரணமாக முற்றிலும் மாறும். இனி மாணவர்கள், 'நான் என்ன படிக்க வேண்டும்?', 'என்ன வேலை தேட வேண்டும்?' என்று நினைப்பதற்கு மாறாக, 'இந்த AI உலகில் என் இடம் எங்கே?' என்பதைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும்" என வினோத் கோஸ்லா தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசுகையில், "பல தொழில்கள் இனி முன்புபோல் இல்லை. சில வேலைகள் முற்றிலும் ஏஐ-யால் எளிதாக செய்யப்படும். அதே நேரத்தில், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். இன்னும் 5 ஆண்டுகளில், மனிதர்கள் செய்யும் அனைத்து பொருளாதார முக்கியத்துவம் கொண்ட வேலைகளில் 80% வேலைகளை ஏஐ செய்யத் தொடங்கிவிடும். 2040 ஆம் ஆண்டுக்குள், 'வேலை தேவை' என்ற தேவையே இல்லாத நிலை ஏற்படும். மக்கள் பணம் சம்பாதிக்க வேண்டி வேலை செய்ய மாட்டார்கள். தொழில்நுட்பம், நம்மால் இப்போது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். வேலைவாய்ப்பு துறைகளில் மூலதன செலவுகளை குறைக்க ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. மனித தொழிலாளர்கள் மீதான சார்பு குறைந்து வருகிறது. இது ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. ஆனால், இப்போது நடக்கிற உண்மையாக மாறியுள்ளது.

இளைய தலைமுறை தங்கள் கல்வி மற்றும் திறன்களை மீண்டும் சீராய்வு செய்ய வேண்டும். பழைய வேலைவாய்ப்பு அமைப்புகள் நம்மை இழுத்து செல்லாது. எதிர்காலத்தைப் பறிக்க நாம் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். அதேபோல், தொழில்நுட்பமும், AI வளர்ச்சியும் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், ஸ்டார்ட் அப் ஆரம்பிக்க வேண்டும் என்று கனவு காண்பவர்கள் ஏராளம். ஆனால், எந்த வழியில், என்ன தேட வேண்டும் என்பதில்தான் குழப்பம். இதுகுறித்தும் வினோத் கோஸ்லா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க விரும்புகிறீர்களா? அப்போது ஒரு உண்மையான பிரச்சனையைத் தேர்ந்தெடுக்கவும். சிறிய பாதுகாப்பான யோசனைகளுக்கு ஆண்டுகளை வீணாக்க வேண்டாம். நீங்கள் ஒரே ஒரு துறையில் நிபுணராக மாற விரும்புகிறீர்களா? அதற்குப் பதிலாக, பல துறைகளில் பரந்த அறிவு கொண்ட Generalist ஆக இருங்கள். ஏனெனில் narrow specialisation-ஐ AI உங்கள் கையிலிருந்து எடுத்துக்கொள்வது உறுதி" என்று தெரிவித்துள்ளார்

மேலும் அவர் கூறுகையில், "சிறந்த மருத்துவரைப் போலவே பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கும் ஏஐ, சிறந்த ஆசிரியை போல் விளக்கும் இலவச கல்வி. இது எல்லாம் எதிர்காலத்தில் உண்மையாகும். ஏனென்றால், ஏஐ அவ்வளவு சக்திவாய்ந்ததாக உருவாகி வருகிறது. வலைதளங்களைச் சேர்ந்த ஏஐ ஆசிரியர்கள், மாணவர்களின் திறன், விருப்பம், வேகத்தைப் பொருத்து தனிப்பயனாக்கப்பட்ட கல்வியை வழங்குவார்கள். கல்வி, சுகாதார வசதி போன்றவை ஒருபோதும் சாதாரண மக்களுக்கு முழுமையாக கிடைக்காது என்று எண்ணிய காலம் முடிவுக்கு வரும். ஏஐ என்பது அனைவருக்கும் சமவாய்ப்பு தரக்கூடிய சக்தியாக மாறும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அடுத்த 10-20 ஆண்டுகளில், மக்கள் எங்கே வாழ்கிறார்கள், எங்கே வேலை செய்கிறார்கள் என்பதை மிகப் பெரிய அளவில் மாற்றப்போகிறது. ஏஐ வளர்ச்சி, சாதாரணமான தொழில்துறைகளை மாற்றுவதோடு மட்டும் இல்லாமல், மாபெரும் நகரங்களின் அதிகாரம் மற்றும் வாய்ப்புகளின் மையமாதிக்கத்தையும் சிதைக்கும்" என அவர் எச்சரித்துள்ளார்.