மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி ரீல்ஸ் எடுத்த போது விபத்து: மாணவன் பலியான சோகம்
தாம்பரம்:
சென்னை பல்லாவரம் வார சந்தை சாலையில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி ரீல்ஸ் எடுப்பது மற்றும் பந்தயம் போட்டு ரேஸ் செல்வது ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதுபற்றி போக்குவரத்து போலீசாருக்கும், பல்லாவரம் சட்டம்-ஒழுங்கு போலீசாரிடமும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்கான அப்துல் அகமது (வயது 17) என்ற சிறுவன் தனது அண்ணனின் மோட்டார் சைக்கிளில், நண்பரான மாணவர் சுஹேல் அகமது (15) என்ற சிறுவனை ஏற்றிக்கொண்டு பல்லாவரம் சந்தை சாலையில் மின்னல் வேகத்தில் சென்று ரீல்ஸ் எடுத்தார். அப்போது எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். இரு மோட்டார் சைக்கிள்களும் திடீரென்று நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறுவன் சுஹேல் அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்த பொதுமக்கள் பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.காயம் அடைந்த 4 பேரையும் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றினர்.
இந்த சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த முகர்ஜி (23), அங்கீத்ராஜன் (23), டெல்லியை சேர்ந்த சர்மா (23) என்பதும், இவர்கள் விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் சமையல்காரர்களாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
பணி முடித்துவிட்டு ஜமீன் பல்லாவரத்தில் தங்கியுள்ள அறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. ரீல்ஸ் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளை அதிவேகமாக சிறுவன் ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில், மற்றொரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இனியாவது பல்லாவரம் சந்தை சாலையில் ரீல்ஸ் எடுப்பவர்கள்மீதும், பந்தயம் போட்டு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள்மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Yasmin fathima

