முடிச்சூரில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்க கோரிக்கை

முடிச்சூரில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்க கோரிக்கை
முடிச்சூரில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்க கோரிக்கை

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் பருவ மழை காலம் என்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் அதிகளவில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அந்த பகுதிகளை கண்டறிந்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக செங்கல்பட்டு ஆட்சியர் தி. சினேகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்காக, 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 390 இடங்கள் பாதிக்கப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் முடிச்சூர் ஊராட்சியும் அடங்கும். குறிப்பாக, 2015-ம் ஆண்டு முதல்,மழைக்காலங்களில் முடிச்சூர் ஊராட்சி பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகிவருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் மழை காலங்களில் முடிச்சூர் பாதிக்கப்படுவது தடுக்கப்படவில்லை.

ஒவ்வொரு முறையும் மழையால் பாதிப்பு ஏற்படும் போது உயர் அதிகாரிகள் முதல், அனைத்து தரப்பினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து நிரந்தரமாக தீர்வு காணப்படும் என சொல்கின்றனர். அதேபோல் அரசியல்வாதிகளும் ஆய்வு செய்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் தீர்வு ஏற்படுவது பேச்சு அளவில் மட்டும் தான் உள்ளது. செயலில் இன்னும் எந்த பணியும் நடைபெறவில்லை. நிதி ஒதுக்கும்படி ஊரக வளர்ச்சி துறை சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இது உயர் அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும் நிதி ஒதுக்காமல் இருப்பது வேதனையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவிக் கின்றனர். அரசு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என முடிச்சூர் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, மழை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.