பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 5 பேர் கைது

Pollachi Five arrested for trying to cut down sandalwood trees in Topslip forest

பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 5 பேர் கைது

டாப்சிலிப் வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 73 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் சந்தனம், தேக்கு, ஈட்டி உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. இந்நிலையில், டாப்சிலிப் வனச் சுற்றில் உள்ள மஞ்சள்போர்டு பள்ளம் எனும் வனப்பகுதியில் நேற்று சிலர் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சர்க்கார்பதி காண்டூர் கால்வாய் பகுதியில் சிலர் இரண்டு சந்தன மரங்களை துண்டுகளாக வெட்டி அங்கு நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அந்த கும்பலை, வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் (40), கே.முகமதுபசீர் (47), தே.மணிகண்டன் (22), தே.சக்கரவர்த்தி (23), தி.அன்பழகன் (21) என்பது தெரியவந்தது. 5 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 73 கிலோ எடை கொண்ட 39 சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் என்பவர், சந்தன மரங்களை வெட்டி கடத்த மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.