அரசு நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம்: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் அபாயம்
சென்னை: அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சி மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணிநியமனங்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பஇஎஸ்சி) மூலமாகவும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாகவும், காவல், தீயணைப்பு, சிறைத் துறைப் பணியாளர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும் தேர்வுசெய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் எம்ஆர்பி எனப்படும் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மூலமாக தேர்வுசெய்யப்படுகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும், அரசுப் பள்ளிகளிலும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அரசுப் பணியில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, 2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் அரசுப் பணியில் 75 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். பேரவை விதி 110-இன் கீழ் அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அவர், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17, 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும் நிரப்பப்படும்.
2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46,584 பணியிடங்கள் மற்றும் சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாகவுள்ள 30,219 பணியிடங்கள் என மொத்தம் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்”என்று குறிப்பிட்டார். இந்நிலையில், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் (வெளிமுகமை) ஆட்களை நியமிக்கும் பொறுப்பு சென்னை கிண்டியில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் அவுட்சோர்சிங் பணிநியமன பணிகளுக்கான முதல் கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளிமுகமை (அவுட்சோர்சிங்) முறையில் பணியாளர்களை தேர்வு செய்யும் ஒப்பந்தப்புள்ளியையும் கோரியுள்ளது.



